காரைக்கால் - பேரளம் இடையேயான அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது:




காரைக்கால்-பேரளம் இடையே அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த ரெயில்பாதை அமைக்கப்படுவதன் மூலம் மயிலாடுதுறை-காரைக்காலுக்கு இடையே பயண தூரம் வெகுவாக குறையும்.

30 ஆண்டுகளுக்கு பிறகு...

ரெயில்வே வாரியத்தின் ஒப்புதல் மற்றும் நிதி வழங்கப்பட்டதையடுத்து காரைக்கால்-பேரளம் இடையேயான அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் தெற்கு ரெயில்வே கட்டுமான அமைப்பால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அடுத்த நிதி ஆண்டிற்குள் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி-நாகூர்-காரைக்கால் பிரிவில் ‘மெட்டீரியல் மாடிபிகேஷன்’ (பொருள்வகை மாற்றியமைத்தல் திட்டம்) திட்டத்தின் கீழ் இந்த பணிக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அகல ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெறுவதையடுத்து காரைக்கால்-பேரளம் இடையே 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரெயில் சேவை தொடங்க உள்ளது.

77 பாலங்கள்

இந்த அகல ரெயில் பாதை பணிகள் நடைபெறும் வழித்தடத்தில் 77 சிறிய அளவிலான பாலங்கள் அமையவிருப்பதாகவும் அதில் 45 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், வாஞ்சியார் ஆற்றின் குறுக்கே பெரிய பாலம் கட்டும் பணி நடந்து வருவதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காரை கோவில்பத்து, திருநள்ளாறு, பதகுடி மற்றும் அம்பகரத்தூர் ஆகிய ரெயில் நிலையங்கள் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ளன. இதில் காரை கோவில்பத்து, திருநள்ளாறு ஆகிய இடங்களில் புதிய ரெயில் நிலைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

ரெயில்வே மேம்பாலம்

காரைக்கால்-திருநள்ளாறு இடையே தண்டவாளம் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதில் காரைக்கால் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்பட இருப்பதாகவும், இது புதுச்சேரி அரசு மற்றும் ரெயில்வே வாரியத்தின் நிதி பங்களிப்பில் கட்டப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்திற்காக திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே 2 எக்டேர் நிலமும், புதுச்சேரி அரசிடம் இருந்து 1.1. எக்டேர் நிலமும் தெற்கு ரெயில்வே கட்டுமான அமைப்பிற்கு தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரளத்தில் ரெயில்வே யார்டு அமைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

திருநள்ளாறு கோவில் பக்தர்கள்

காரைக்கால்-பேரளம் அருகே திருநள்ளாறு வழியாக மீட்டர் கேஜ் ரெயில் பாதையில் இயக்கப்பட்டு வந்த ரெயில் சேவை 1987-ம் ஆண்டு நிறுத்தப்பட்டு தண்டவாளங்கள் அகற்றப்பட்டது.

இந்த அகல ரெயில் பாதை அமைவது திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிகவும் வரப்பிரசாதமாக அமையும்.

பயண நேரம் குறையும்

மயிலாடுதுறையில் இருந்து காரைக்காலுக்கு பேரளம் வழியாக அமைக்கப்பட்டு வரும் இந்த அகல ரெயில் பாதையில் ரெயில் சேவை தொடங்கும் பட்சத்தில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர் வழித்தடத்தை விட பயண தூரம் வெகுவாக குறையும். புதிய அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டதை அடுத்து பேரளம் ரெயில் நிலையம் ரெயில் சந்திப்பாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments