ஆன்லைனில் லோன் தருவதாகக் கூறி வங்கி அதிகாரியின் புகைப்படத்தை மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டல்




தஞ்சாவூரில் ஆன்லைன் மூலம் லோன் தருவதாகக் கூறி, தனியார் வங்கி உதவி மேலாளரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் வங்கி உதவி மேலாளர் ஒருவர், தஞ்சாவூர் சைபர் கிரைம் காவல் பிரிவில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: பேஸ்புக் பக்கத்தில் ஆன்லைன் கிரெடிட் மூலம் லோன் தருகிறோம் என ஒரு விளம்பரம் வந்தது. மேலும், கிரெடிட் லோன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறப்பட்டது. அதன்படி, நானும் எனது செல்போனில் அந்த செயலியை பதிவிறக்கம் செய்தேன். தொடர்ந்து, எனது செல்போனில் உள்ள கேலரி, தொடர்பு எண்கள், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றுடன் இணைக்க, அந்த செயலியில் கூறப்பட்டிருந்ததைப் போல ஒப்புதல் அளித்தேன்.

பின்னர், அந்த செயலியில் லோன் வேண்டுமென்றால் ரூ.5,000 கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டதால், நான் செயலியில் இருந்து வெளியேறிவிட்டேன். சில நாட்கள் கழித்து எனது வங்கிக் கணக்கில் ரூ.9 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. இந்தப் பணம் அந்த செயலி மூலம் வரவு வைக்கப்பட்டதை அறிந்ததால், அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.


இந்நிலையில், சில நாட்கள் கழித்து எனது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து, எனது செல்போனுக்கு அனுப்பி, இதை வெளியிடாமல் இருக்க ரூ.14,700 தர வேண்டும் என குறுந்தகவல் வந்தது. மேலும், மார்பிங் செய்யப்பட்ட எனது புகைப்படம் எனது உறவினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் குறித்து தஞ்சாவூர் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர் கார்த்தி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments