திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரெயில் சேவையை தொடங்க பாதுகாப்பு ஆணையர் அனுமதி






திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே ரெயில் சேவையை தொடங்க ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி வழங்கியுள்ளார்.
 
இதனையடுத்து இந்த வழித்தடத்தில் விரைவில் ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

திருச்சி ரெயில்வே கோட்ட எல்லைக்கு உட்பட்ட கரையோர பகுதியான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி-நாகை மாவட்டம் அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ தூரத்திற்கு ஏற்கனவே அமைந்திருந்த மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி நிறைவுபெற்றது.

இதனைத்தொடர்ந்து கடந்த 21, 22-ம் தேதிகளில் தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபை குமார் ராய் இந்த புதிய அகல ரெயில் பாதையை ஆய்வு செய்தார்.

102 கி.மீ. வேகத்தில்...

சிறப்பு ரெயிலில் பயணம் செய்து வேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்த தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர், அதிகபட்சமாக மணிக்கு 102 கி.மீ. வேகம் எட்டியதாக தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது தெற்கு ரெயில் வேயை சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் ரெயில்வே கட்டுமான அமைப்பை சேர்ந்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.

ரெயில் சேவை தொடங்க அனுமதி

ஆய்வு மற்றும் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்ததை அடுத்து கடந்த வியாழன் அன்று இந்த வழித்தத்தில் பயணிகள் மற்றும் சரக்கு ரெயில்களை 70. கி.மீ வேகத்தில் இயக்குவதற்கு தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

மேலும் இந்த வழித்தடத்தில் சேவையை தொடங்குவதற்கு முன் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகளையும் அவர் அளித்துள்ளார்.

நிபந்தனைகள்

இந்த வழித்தடத்தில் அகஸ்தியம்பள்ளி, வேதாரண்யம், தோப்புத்துறை, நெய்விளக்கு, குரவப்புலம் மற்றும் கரியாப்பட்டிணம் ஆகிய இடங்களில் புதிய ரெயில் நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நிபந்தனைகளின் படி ரெயில் சேவையை தொடங்குவதற்கு முன்னர் அனைத்து ரெயில் நிலையங்களிலும் பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் ரெயில்வே விதிமுறைகளின்படி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.இந்த வழித்தடத்தில் அமைந்துள்ள 13 லெவல் கிராசிங்குகளில், ரெயில்வே கொள்கையின்படி ரெயில்வே ஊழியர்கள் அல்லது முன்னாள் ராணுவ வீரர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

உப்பு ஏற்றுமதி

தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சேவையை தொடங்க அனுமதி வழங்கியதையடுத்து, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே நீண்ட நாட்களுக்கு பிறகு சரக்கு மற்றும் பயணிகள் ரெயில் சேவை விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த வழித்தடத்தில் ரெயில் சேவையை நிறுத்துவதற்கு முன்னர் அகஸ்தியம்பள்ளியில் இருந்து சரக்கு ரெயில் மூலம் உப்பு ஏற்றுமதி நடந்தது. தற்போது பயணிகள் மற்றும் சரக்கு ரெயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து உப்பு ஏற்றுமதியை மீண்டும் செயல்படுத்துவதற்கு உப்பு வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் ரெயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி : தினத்தந்தி 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments