மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு | இன்று நவம்பர் 28 முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் - முழு விவரம்




மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று நவம்பர் 28 முதல் முதல் டிச. 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 2.30 கோடி வீட்டு மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்து, அதற்கானப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

இதன்படி, மின் நுகர்வோர் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு, ஆதார் எண்ணை இணைக்குமாறு மின்வாரியம் குறுஞ்செய்தியை அனுப்பி வருகிறது.

மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் எனவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதற்கிடையே, ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின் வாரியம் உத்தரவிட்டது. மின் நுகர்வோர் அனைவரும் ஒரே நேரத்தில் மின் வாரிய இணையதளம் சென்று, தங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் மின் வாரிய இணையதளத்தின் சர்வர் முடங்கியது. ஆதார் எண்ணை இணைக்க முடியாமலும், மின் கட்டணத்தைச் செலுத்த முடியாமலும் நுகர்வோர் அவதிக்குள்ளாகினர்.

இது தொடர்பாக நுகர்வோர் தரப்பில் இருந்து ஏராளமான புகார்கள் அனுப்பிவைக்கப்பட்டன. இதையடுத்து, மின் கட்டணம் செலுத்த 2 நாட்கள் கூடுதல் அவகாசத்தை வழங்கி, மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனாலும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க, மின் வாரிய அலுவலகங்களில் நுகர்வோர் குவிந்தனர். ஒரே நேரத்தில் ஏராள மானோர் ஆதார் எண்ணை இணைக்க முயன்றதால், மின் வாரியத்தின் இணையதள சேவை முடங்கியது.

இதையடுத்து, ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே, ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மின் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இன்று (நவ. 28) முதல் டிச. 31-ம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. பண்டிகை நாட்களைத் தவிர்த்து, ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் செயல்படும்.

பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், டிச. 31-ம் தேதி வரை ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி மின் கட்டணம் செலுத்தலாம்.

மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதால், வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது.

அதேபோல, கைத்தறி, விசைத்தறி மின் நுகர்வோருக்கு வழங்கப்பட்டு வரும் மானியம் மற்றும் குடிசை, விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.








மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி?

தமிழகத்தில் 2.36 கோடி மின் பயனாளர்கள் உள்ளனர். அவர்களுடன், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிலாளர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரையும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழக மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனை இரு வழிகளில் செய்யலாம்.

ஒன்று, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையதளம். மற்றொன்று மாநிலத்தில் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் திங்கள்கிழமை முதல் நடைபெறும் சிறப்பு முகாம்கள்.

இணையதளம் வழியே...

தமிழ்நாடு மின் வாரியத்தின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான வசதி உள்ளது.

இணையதளத்தில் ஏற்கெனவே கைப்பேசி எண்ணை பதிவு செய்யாவிட்டால், அந்த இணையதளத்திலேயே வசதி உள்ளது. மின் இணைப்பு எண்ணைக் குறிப்பிட்டு கைப்பேசி எண்ணை பதிவு செய்யலாம்

கைப்பேசி எண்ணை பதிவு செய்த பிறகு, ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணிகளை இணையதளத்தில் தொடங்கலாம்.

இணையதளத்தில் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்தவுடன் கைப்பேசி எண்ணையும் பதிவிட வேண்டும். இதன்பிறகு, கைப்பேசிக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய எண் (ஒடிபி) வரும். இதைப் பயன்படுத்தி உள்ளே சென்றதும், குடியிருப்போரின் விவரம் கோரப்படும். அதாவது, வீட்டின் உரிமையாளரா, வாடகைக்கு குடியிருப்போரா, இணைப்பு எண்ணை மாற்றாமல் இருப்பவரா எனக் கேட்கப்படும். இந்த மூன்று வாய்ப்புகளில் ஏதேனும் ஒரு வாய்ப்பைத் தேர்வு செய்ய வேண்டும். இதன்பின், ஆதார் எண்ணை இடைவெளியின்றி பதிவு செய்ய வேண்டும். ஆதாரில் உள்ள விவரப்படி பெயரையும் தெரிவிக்க வேண்டும்.

300 கேபி அளவுக்கு மிகாமல் ஆதார் அடையாள அட்டையின் ஸ்கேன் செய்யப்பட்ட படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனை செய்த பிறகு, சரியான ஆதார் எண்ணை இணைத்திருக்கிறேன் என்ற ஆங்கில வாசகத்துக்கு எதிரே கிளிக் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

இதன்பிறகு, விண்ணப்பம் செய்ததற்கான சான்று திரையில் தோன்றும். அதில் ஆதார் எண் இணைக்கப்பட்டதற்கான செய்தி கைப்பேசி குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments