அரக்கோணம் அருகே மைசூர் - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் ரெயில் மோதி கன்றுக்குட்டி உயிரிழப்பு





சென்னை-மைசூர் இடையேயான வந்தே பாரத் ரெயில் கடந்த வாரம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ரெயில் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடி, பெங்களூரு ரெயில் நிலையத்தில் நிற்கும். பின்னர் கடைசியாக மைசூர் சென்றடையும்.

இந்த ரெயில் நேற்று மாலை அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தின் குறுக்கே வந்த கன்றுக்குட்டியின் மீது மோதியது.

இதில் அந்த கன்றுக்குட்டி இறந்துபோனது. விபத்து ஏற்பட்டபோது வந்தே பாரத் ரெயில் 90 கி.மீட்டர் வேகத்தில் வந்ததாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரெயிலின் முன் பகுதியை என்ஜின் டிரைவர் சோதனை செய்தார். இதில் ரெயிலின் முன் பகுதி லேசாக சேதம் அடைந்து இருந்தது.

பின்னர் 2 நிமிடம் தாமதமாக வந்தே பாரத் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ரெயில் தண்டவாளத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்ட அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.




ஆனால் இறந்து போன கன்று குட்டியின் உரிமையாளர் யார் என்று தெரியவில்லை. இதையடுத்து அபராதம் விதிக்க கன்று குட்டியின் உரிமையாளரை ரெயில்வே போலீசார் தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே கோட்ட அதிகாரி கூறும்போது, 'அரக்கோணம் அருகே வந்தே பாரத் ரெயில் மோதியதில் கன்றுக்குட்டி இறந்து போனது. அந்த கன்று குட்டியின் உரிமையாளரை கண்டு பிடித்து வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும்.

தண்டவாளத்தில் கால்நடைகளை சுற்ற விட்டால். உரிமையாளர்கள் மீது ரெயில்வே சட்ட 1989-ன்படி 154-வது பிரிவின் தண்டிக்கப்படுவார்கள்' என்றார்.

ஏற்கனவே குஜராத் காந்தி நகர்- மும்பை இடையே செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 3வது முறை கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கி முன்பக்கம் பகுதி பழுதடைந்தது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments