உரத்தை மற்ற இடுபொருட்களுடன் இணைத்து விற்றால் உரிமம் ரத்து! வேளாண்மை இணை இயக்குனர் எச்சரிக்கை!!



புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளர்கள் உரங்களை மற்ற இடுபொருட்களுடன் இணைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் கூறினார்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர், பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் யூரியா 3248 மெட்ரிக் டன்கள், டி.ஏ.பி. 1289 மெட்ரிக் டன்கள், பொட்டாஷ் 845 மெட்ரிக் டன்கள், காம்ளக்ஸ் உரங்கள் 5323 மெட்ரிக் டன்கள் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 443 மெட்ரிக் டன்கள் உரம் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

உரக் கட்டுப்பாட்டு ஆணைப்படி மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவியின் மூலம் விற்பனை செய்ய வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் விவசாயிகளின் பார்வையில் படும்படி பராமரிக்கப்பட வேண்டும். விற்பனை முனைகருவியில் உள்ள இருப்பும், உண்மை இருப்பும் சரியாக இருக்குமாறு உர இருப்பினை பராமரித்திட கேட்க வேண்டும்.

விவசாயிகளின் தேவைக்கு அதிகமாகவும், ஒரே நபருக்கு அதிக அளவு உரமும் வழங்கக் கூடாது. குறிப்பிட்ட விவசாயியின் பெயரில் அதிகபடியாக உர விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சில்லறை விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான உரங்களுடன் வேறு சில இடுபொருட்களை இணைத்து கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு வழங்கக் கூடாது.

வெளி மாவட்டங்களுக்கு மானிய உரங்களை அனுப்புவதோ, வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்ய கூடாது. சில்லறை உர விற்பனையாளர்களுக்கு அனுப்பும் பொழுது உரிய ஆவணத்துடன் உரங்களை வாகனங்களில் அனுப்ப வேண்டும். உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் உரத்தை இருப்பு வைப்பதும், உரிமத்தில் அனுமதி பெறாத நிறுவனங்களின் உரங்களை கொள்முதல் செய்வதும் கூடாது. விவசாயம் மேற்கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக் கூடாது. எனவே, திடீர் ஆய்வின் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் உர விற்பனை உரிமம் உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன்படி ரத்து செய்யப்படும.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை மட்டும், விற்பனை முனையகருவி மூலம் வாங்கிடவும், உரங்களை மண்வள அட்டை பரிந்துரைப்படி, வாங்க வேண்டும். பொதுப் பரிந்துரையாக மத்தியகால மற்றும் நீண்டகாலப் நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு தழை, மணி, சாம்பல் சத்துக்கள் முறையே 60, 20, 20 கிலோ தேவைப்படும். இச்சத்துக்கள் குறைவின்றி கிடைப்பதற்கு யூரியா 53 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 150 கிலோ, பொட்டாஷ் 17 கிலோ ஆகியவற்றை அடியுரமாக இடலாம். அல்லது 20:20:0:13 என்ற காம்ப்ளக்ஸ் உரம் 120 கிலோ அளவிலும் பொட்டாஷ் உரத்தினை 21 கிலோ அளவிலும் அடியுரமாக இடலாம்.

தொடர்ந்து மேலுரமாக யூரியா உரம் இடும்பொழுது ஒரு தெளிப்பிற்கு ஒரு ஏக்கருக்கு 26 கிலோ என்ற அளவில் மேலுரமாக 3 முறை இட வேண்டும். காம்ப்ளக்ஸ் உரங்களைப் பயன்படுத்துவதனால் உரம் வீணாவது தடுக்கப்படுவதோடு பயிருக்குத் தேவையான உரங்கள் மண்ணில் தேவையான அளவு கிடைப்பதனால் பூச்சி, நோய்த் தாக்குதலும் வெகுவாகக் குறைகின்றது. பயிருக்குத் தேவையான கந்தகச்சத்து 13 சதம் இருப்பதனால் அதிக மகசூல் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது. மேலும் உரங்களுடன் வேறு இடுபொருட்களை இணைத்து விற்பனை செய்தாலோ அல்லது உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டாலோ சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை அல்லது மாவட்ட உரக் கண்காணிப்பு மையத்தை 04322-221666 என்ற எண்ணில் விவசாயிகள் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments