தமிழகத்தில் நாளை மறுதினம் முதல் மழை பெய்யும் வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது புயலாக வலுப்பெற வாய்ப்பு
        வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று ( திங்கட்கிழமை) உருவாகக்கூடும் என்றும், இது புயலாக வலுப்பெற வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. முதலில் மழைப்பொழிவு எதிர்பார்த்த அளவில் இருந்தாலும், பின்னர் ஏமாற்றத்தையே கொடுத்தது. நவம்பர் மாதம் முதல் மற்றும் 2-வது வாரத்தில் முதல் மற்றும் 2-வது மழைப் பொழிவு அதிகளவில் பதிவானது.

இதில் 2-வது மழைப் பொழிவில் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டியது. அதிகபட்சமாக சீர்காழியில் ஒரே நாளில் 43 செ.மீ. மழை பெய்தது. இது 120 ஆண்டுகள் வரலாற்றில் இல்லாத மழைப் பதிவாக பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதத்தின் 3-வது வாரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தமிழகத்தில் 3-வது மழைப்பொழிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது பொய்த்து போனது.

வறண்ட காற்று, அதனை கடல் பகுதியில் இருந்து நிலப் பகுதிக்குள் விடாமல் தடுத்து நிறுத்தியது. இதனால் எதிர்பார்த்த மழை கிடைக்காததோடு, அந்த தாழ்வு மண்டலம், தமிழக கடற்கரைப் பகுதி வழியாக ஆந்திர கடலோர பகுதியில் வலுவிழந்தது.

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அதன் பின்னர், தமிழகத்தில் மழைக்கான சூழல் குறைந்து காணப்பட்டது. சுமார் 10 நாட்களுக்கு மேலாக பெரிய அளவில் மழை எங்கும் பதிவாகவில்லை. இருப்பினும், தென் மாவட்டங்களில் மட்டும் ஓரிரு இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது.

இந்தநிலையில் ஏற்கனவே கணித்திருந்தபடி, வடகிழக்கு பருவமழை காலத்தில் பெரும் எதிர்பார்ப்பாக இந்த மாதத்தில் மழைப்பொழிவு இருக்கும் என்று கூறப்பட்டது. அதற்கேற்றாற்போல், தற்போது வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (திங்கட்கிழமை) உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் (அதாவது 7-ந்தேதி இரவு), மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும், வருகிற 8-ந்தேதியன்று (வியாழக்கிழமை) தமிழகத்தின் வட மாவட்டங்கள்-புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவே கூறப்படுகிறது.

நாளை மறுதினம் முதல்...

இதன் காரணமாகவும், குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு கேரளா வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நாளை மறுதினம் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியின் அனேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

ஆரஞ்சு ‘அலர்ட்’

தமிழகத்தில் 8-ந்தேதி (வியாழக்கிழமை) அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.

இதைப்போல திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேற்சொன்ன மிக கன மழை பெய்யக்கூடிய இடங்களுக்கு நிர்வாக ரீதியாக விடுக்கப்படும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மேலும், தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், தமிழக-ஆந்திர கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகளில் நாளை மறுதினமும், அதற்கு அடுத்த நாளும் சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ. முதல் 70 கி.மீ. வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு மேற்சொன்ன நாட்களில் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், நாலுமுக்கு, ஊத்து தலா 5 செ.மீ., சீர்காழி, திருபுவனம், காக்காச்சி தலா 4 செ.மீ., கீழ் அணைக்கட்டு, ராமநாதபுரம், கடலூர், லால்பேட்டை, கொள்ளிடம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி, தானியமங்கலம், காட்டுமன்னார் கோவில், தேவகோட்டை, மயிலாடுதுறை, பாம்பன், திருக்கழுக்குன்றம், ஏற்காடு, மண்டபம், மாஞ்சோலை, மூலைக்கரைப்பட்டி தலா 3 செ.மீ. என சில இடங்களில் மழை பெய்துள்ளது. இதுதவிர புதுச்சேரியில் 4 செ.மீ. மழை பதிவாகியிருக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments