தமிழகத்தில் மீண்டும் மிரட்டப்போகும் மழை வங்கக்கடலில் நாளை புயல் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது




காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று புயலாக வலுவடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த அக்டோபர் மாத இறுதியில் அடைமழையுடன் அமர்க்களமாக தொடங்கியது. அதன்பின்னர் மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்தது. சென்னையில் பனியின் தாக்கம் அதிகரித்தது.

இதனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த மழைபொழிவை தராமல் ஏமாற்றிவிட்டதோ என்ற எண்ணம் பலருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தை மழை மீண்டும் மிரட்ட காத்திருக்கிறது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகளில் 5-ந்தேதி (அதாவது நேற்று) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி இந்த பகுதிகளில் நேற்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெற்று புயலாக மாற இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 தினங்களில் மழை வெளுத்து வாங்க உள்ளது.

புயல் சின்னம்

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிற 6-ந்தேதி மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும்.

பின்னர் மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவடைந்து 8-ந்தேதி அன்று காலை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதனையொட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளின் அருகில் வந்தடைய கூடும்.

6-ந்தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

7-ந்தேதி (நாளை) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

8-ந்தேதி (வியாழன்) தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுத்துறை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மிக கனமழை

9-ந்தேதி (வெள்ளி) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments