மாமல்லபுரம்- கல்பாக்கம் இடையே சாலை விரிவாக்க பணிக்காக 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றம்




மாமல்லபுரம்- கல்பாக்கம் இடையே கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
செங்கல்பட்டு 4 வழிச்சாலையாக விரிவாக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தற்போது அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது.

தற்போது 4 வழிச்சாலை விரிவாக்க பணிக்காக 5 ஆயிரத்து 434 ஏக்கர் அரசு புறம்போக்கு மற்றும் பட்டா நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தனியாரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பட்டா நிலங்களுக்கு அரசு மூலம் நிர்ணயிக்கப்பட்ட உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.

இதில் மாமல்லபுரம் முதல் கல்பாக்கம் வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில், இழப்பீடு தொகை வழங்கப்பட்டு, கையகப்படுத்தப்பட்ட பட்டா நிலங்களில் உள்ள கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டு அந்த இடங்கள் சாலை விரிவாக்க பணிக்காக சமன்படுத்தப்பட்டும், மழை நீர் செல்லும் இடங்களில் சிறிய பாலங்கள் கட்டும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

மரங்கள் வெட்டி அகற்றம்

குறிப்பாக சாலை விரிவாக்க பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் சாலையின் இரு புறமும் உள்ள வாகை மரம், வேப்ப மரம், புங்கை மரம், கொன்றை மரம், வேப்ப மரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மரங்கள் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் வெட்டி அறுக்கப்பட்டு பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மரங்களை கட்டிட பயன்பாடுகளுக்காக பொது ஏலம் எடுத்தவர்கள் சிறு, சிறு துண்டுகளாக வெட்டி லாரி மூலம் எடுத்து சென்றனர்.

இந்த நிலையில் தற்போது சாலை விரிவாக்க பணிக்காக கிழக்கு கடற்கரை சாலையில் இரு புறமும் அந்த சாலையில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு குடை போல் வரிந்து நிழல் கொடுத்து வந்த மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கி உள்ளது.

சாலை விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவது இயல்பான ஒன்றுதான் என்றும் வெட்டப்படும் மரங்களுக்கு இணையாக புதிதாக அமைக்கப்படும் சாலையின் இருபுறமும் ஒரு மரத்திற்கு 10 மரங்கள் என கணக்கிட்டு அதிக அளவில் மரங்கள் வைத்து பராமரிக்க வேண்டும்.

கிழக்கு கடற்கரை சாலையின் பசுமையான சூழலையும், இயற்கை காற்றையும் இந்த சாலையை கடக்கும் வாகன ஓட்டிகளும் பழையபடி அனுபவித்து ரசிக்க வேண்டும் என்றும், அதற்கு சாலை விரிவாக்க பணிகள் முழுவதும் நிறைவடைந்த பிறகு அதிக அளவில் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் சாலை மேம்பாட்டு நிறுவனத்தை வலியுறுத்தி உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments