வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25,777 பேர் விண்ணப்பம் அதிகாரிகள் நேரில் ஆய்வு
        புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25 ஆயிரத்து 777 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்காளர் பட்டியல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பம் பெறப்பட்டது. இதில் 1-1-2023 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2023-ம் ஆண்டில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், இறந்த நபர்கள், நிரந்தரமாக முகவரி மாறியவர்களை வாக்காளர் பட்டியலில் நீக்கம் செய்திடவும், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் தங்கள் முகவரியில் மாற்றம் செய்யவும் வாக்காளர்களின் பெயர், முகவரி மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் கடந்த நவம்பர் மாதம் 9-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை படிவங்கள் பூர்த்தி செய்து வழங்கப்பட்டன.

25,777 பேர் மனு

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற சிறப்பு முறை சுருக்கத்திருத்தத்தின் கீழ் இணையதளம் வாயிலாக 33,043 மனுக்களும், நேரடியாக 24,183 மனுக்களும் என மொத்தம் 57,226 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25,777 மனுக்களும், பெயர் நீக்க 23,180 மனுக்களும், திருத்தம் மேற்கொள்ள 8,269 மனுக்களும் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கவிதா ராமு, சின்னப்பாநகர் முதலாம் வீதி மற்றும் மாலையீடு சண்முகா நகர் ஆகிய இடங்களில் களஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகராட்சி ஆணையர் நாகராஜன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இதேபோல் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments