திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அறந்தாங்கி நோக்கி வந்த அரசு பஸ் மீது கார் மோதியதில் பெண் உள்பட 3 பேர் படுகாயம்
திருச்சியில் இருந்து நேற்று காலை ஒரு அரசு பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு அறந்தாங்கி நோக்கி புதுக்கோட்டை சாலையில் சென்றது. அந்த பஸ்சை ராமநாதபுரத்தை சேர்ந்த பாலமுருகன்(வயது 43) ஓட்டினார். அண்ணா பல்கலைக்கழகம் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக அந்த பஸ் மெதுவாக சென்றது. அப்போது எதிரே புதுக்கோட்டையில் இருந்து திருச்சியை நோக்கி சென்ற ஒரு கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கி உருக்குலைந்தது. அதில் பயணம் செய்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சம்சுதீனின் மகன் அசார்(வயது 19), யாஸ்மின்(34) மற்றும் கார் டிரைவர் அறிவொளி(42) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். 

மேலும் அரசு பஸ்சின் முன் பகுதி சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த மண்டையூர் போலீசார் அங்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments