குடிநீர்த் தொட்டியில் `மலம்' கலக்கப்பட்ட கொடூரம்; சிகிச்சையில் சிறுவர்கள்... புதுக்கோட்டை அதிர்ச்சி!




    புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமம் இருக்கிறது. இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன.
இந்த நிலையில், இந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலருக்கு அடுத்தடுத்து திடீர் உடல்நலக்குறைவும், ஒவ்வாமையும் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சிறுவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், `சிறுவர்கள் குடித்த குடிநீரில்தான் பிரச்னை இருந்திருக்கிறது. இதனால்தான், சிறுவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கிறது' எனக் கூறியிருக்கின்றனர்.

உடனே, கிராமத்தைச் சேர்ந்த சிலர், அவர்கள் பயன்படுத்திவந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிப் பார்த்திருக்கின்றனர். அப்போது, அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குடிநீரின் மேற்பகுதியில் இயற்கை உபாதைகள் (மலம்) மிதந்துகொண்டிருந்ததைக் கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை, அன்னவாசல் போலீஸார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, குடிநீரில் திட்டமிட்டே சிலர் இயற்கை உபாதைகளைக் கொட்டியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சுமார் 50,000 லிட்டர் கொள்ளளவுகொண்ட மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியிலிருந்த தண்ணீர் முழுவதுவமாக அகற்றப்பட்டது. இது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் பேசியபோது, ``நேற்றிலிருந்து குழந்தைகளுக்குத் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால, பதற்றமடைஞ்சுபோய், மருத்துவமனையில் சேர்த்தோம். அப்புறம்தான், குடிக்கிற தண்ணீரில் பிரச்னை இருக்குன்னே தெரிஞ்சுது. குற்றவாளியை உடனே கைதுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கணும்" என்றனர் ஆதங்கமாக. கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ சின்னதுரையிடம் பேசினோம். ``குடிநீர்த் தொட்டியிலிருந்த தண்ணீர் முழுவதுமாக அகற்றப்பட்டு, சுத்தம் செய்து மீண்டும் தண்ணீர் ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இழிவான இந்தச் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. யார் இதைச் செய்திருந்தாலும், போலீஸார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸாரிடம் வலியுறுத்தியிருக்கிறோம். மேலும், இந்தப் பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அதை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறேன். ஒன்றிய நிர்வாகம் சார்பில் கேமராக்கள் பொருத்துவதாகக் கூறியிருக்கின்றனர்" என்றார். போலீஸாரிடம் கேட்டபோது, "இது குறித்து விசாரணை நடத்திவருகிறோம். விரைவிலேயே குற்றவாளிகளைக் கைதுசெய்வோம்" என்றனர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் குடிநீரில் இயற்கை உபாதைகள் கிடந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments