அடுத்த வாரம் யாழ்ப்பாணம்-சென்னை இடையே மீண்டும் விமான போக்குவரத்து இலங்கை மந்திரி தகவல்


யாழ்ப்பாணம்-சென்னை இடையே அடுத்த வாரம் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கப்படும் என்று இலங்கை மந்திரி தெரிவித்தார்.

இலங்கையில் தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் பலாலியில் விமான நிலையம் இயங்கி வருகிறது. சீர்குலைந்த நிலையில் காணப்பட்ட அந்த விமான நிலையம், கடந்த 2019-ம் ஆண்டு இந்திய-இலங்கை அரசுகளின் கூட்டு நிதியுதவியுடன் மறுசீரமைக்கப்பட்டது.

2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்று பெயர் சூட்டப்பட்டது. அங்கு தரையிறங்கிய முதலாவது சர்வதேச விமானம், சென்னையில் இருந்து சென்ற விமானம் ஆகும். ஏர் இந்தியாவின் துணை நிறுவனம், சென்னை-யாழ்ப்பாணம் இடையே 3 வாராந்திர விமானங்களை இயக்கி வந்தது.

இருப்பினும், 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னையில் இருந்து விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 2020-ம் ஆண்டு கொரோனா பரவலால் விமான போக்குவரத்து மேலும் சீர்குலைந்தது.

இந்தநிலையில், 3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, யாழ்ப்பாணம்-சென்னை இடையே மீண்டும் விமான போக்குவரத்து தொடங்குகிறது.

இதுகுறித்து இலங்கை விமான போக்குவரத்து மந்திரி நிமல் சிறிபாலா டி சில்வா நாடாளுமன்றத்தில் கூறியதாவது:-

யாழ்ப்பாணம்-சென்னை இடையே அடுத்த வாரம் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்குகிறது. அநேகமாக, 12-ந் தேதி விமான போக்குவரத்து தொடங்கப்படலாம்.

தற்போது, ஓடுபாதையில் சில பணிகளை முடிக்க வேண்டி உள்ளது. தற்போதைய நிலையில், அந்த ஓடுபாதையில் 75 இருக்கைகள் கொண்ட விமானங்களை மட்டுமே இயக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விமான போக்குவரத்து, இலங்கை சுற்றுலா துறை வளர்ச்சிக்கு உதவும் என்றும், பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மீண்டுவர பயன்படும் என்றும் கருதப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments