மீமிசல் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் போதிய மழை இல்லாததால் விளை நிலங்களில் ஆடு-மாடுகள் மேயும் அவலநிலை! நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!!



மீமிசல் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் போதிய மழை இல்லாததால் விளை நிலங்களில் ஆடு-மாடுகள் மேயும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மற்றும் மணமேல்குடி ஒன்றிய பகுதிகள் கிட்டத்தட்ட ஆற்றுப்பாசனம் இல்லாத ஒரு வறண்ட பகுதியாகும். இப்பகுதி விவசாயிகள், குறிப்பாக பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இப்பகுதியில் நடைபெறும் விவசாயம் முற்றிலும் மானாவாரி விவசாயமாகும். மழை முறையாகப் பெய்து கண்மாய்கள் நிரம்பினால் தான் விவசாயம் ஓரளவிற்கு இங்கு நடைபெறும். கண்மாய் இல்லாத பகுதிகள் வானம் பார்த்த பூமியாகத்தான் இருக்கும். பயிர்கள் முற்றும் வரையில் மழை தொடர்ந்தால் தான் இங்கு விவசாயத்தில் ஏதாவது பலன் கிடைக்கும். ஒரு வருடம் மழை பொய்த்துவிட்டால் விவசாயம் செய்வதை இப்பகுதி விவசாயிகள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது.

இன்றைய கால கட்டத்தில் பருவ நிலை தலைகீழாக மாறிவிட்டது. முந்தைய காலகட்டத்தைப்போல் பருவநிலை மாற்றங்கள் ஏற்படுவது இல்லை. ஒரு ஆண்டு முழுவதும் மழை இல்லாமல் போய் விடுகிறது அல்லது கடும் மழை பெய்து விவசாயத்தை அழித்துவிடுகின்றது. இப்படியிருக்கையில், மழையை நம்பி இப்பகுதியில் விவசாயம் செய்த விவசாயிகள் கடந்த ஆண்டுகளில் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். 
கருகிய நெல் பயிர்கள் 
இந்நிலையில் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் பிர்கா சுற்று வட்டார பகுதி மற்றும் மணமேல்குடி ஒன்றியம் கோட்டைபட்டினம் பிர்கா சுற்று வட்டார பகுதிகளில் நடப்பாண்டில் (2022) போதுமான அளவு மழை பெய்யாததால் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், இனி மழை பெய்ய வாய்ப்பு இல்லை, அப்படி மழை பெய்தாலும் கருகிய பயிர்கள் மீண்டும் முளைப்பதற்கு வாய்ப்பில்லை என்று கருதி வயலில் ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர். 
 
நிவாரணம் வழங்க கோரிக்கை 
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், நாங்கள் கடன் வாங்கி தான் இந்த முறை நெல் விதைப்பு செய்திருந்தோம். இந்த நிலையில் தற்போது மழையில்லாமல் விதைப்பு செய்த பயிர்கள் கருகி விட்டன. இதனால் நாங்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். விவசாயத்திற்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்று தெரியவில்லை.


மேலும் பல ஆண்டுகளாகவே விவசாய இடுபொருட்களான விதை, உரம், பூச்சி மருந்து போன்றவற்றின் விலைகள் கடுமையாக அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், நஷ்டத்தை சந்தித்துக்கொண்டு பெரும்பாலான விவசாயிகள் நிரந்தரக் கடன்காரர்களாக ஏற்கனவே மாறிக்கொண்டிருக்கின்றனர். பொதுவாக ஒரு ஏக்கர் நெல் விவசாயம் செய்ய ரூ.30,000/- செலவாகிறது. இவ்வாண்டும் உரிய நேரத்தில் மழை பெய்யாததால் மேலும் நஷ்டமடைந்து, கடன் சுமை மேலும் அதிகரித்து கடும் மன உளைச்சலுக்கு விவசாயிகள் ஆளாகியிருக்கின்றனர். எனவே மழையில்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றனர்.

கடந்த 2021-ஆம் ஆண்டு மீமிசல் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசமடைந்தது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments