தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைன் மூலம் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்த பலரது தகவல்கள் பதிவாகவில்லை மீண்டும் நேரடியாக இணைக்க மின்வாரியம் அறிவுறுத்தல்




தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைன் மூலமாக மின் இணைப்புடன் ஆதாரை இணைத்த பலரது தகவல்கள் பதிவாகவில்லை. இவர்கள் மீண்டும் மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாக ஆதாரை இணைக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஆதார் இணைப்பு

தமிழகத்தில் 2.67 கோடி மின் இணைப்புகள் உள்ளன. மின்நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் உத்தரவிட்டது. இதற்கான பணிகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது.

ஒருவரது பெயரில் வெவ்வேறு மின் இணைப்புகள் இருக்கும்பட்சத்தில் ஒரே ஒரு மின் இணைப்புக்கு மட்டுமே 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், மீதமுள்ள இணைப்புகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படாது என்றும், இதற்காக மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் அறிவுறுத்தி வருவதாக ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகின. இதனால், முதலில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பெரும்பாலானவர்கள் தயக்கம் காட்டினர்.

இதன்பின்பு, ஒருவரது பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம் அளித்தது.

1.96 கோடி பேர் இணைத்துள்ளனர்

இதைத்தொடர்ந்து மின்நுகர்வோர் மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டனர்.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31-ந்தேதி இறுதி நாள் என மின்வாரியம் காலக்கெடு விதித்தது. தற்போது இந்த காலக்கெடு ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 1.96 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும், இன்னும் சுமார் 70 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது இருப்பதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வழங்கிய கால அவகாசம் நிறைவு பெறுவதற்கு இன்னும் 2 வாரங்கள் உள்ள நிலையில் டிசம்பர் 4-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் ஆதார் எண்ணை இணைத்த மின்நுகர்வோர்களின் தகவல்கள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்வாரிய பதிவு தொகுப்பில் சேமிக்கப்படாமல் போய்விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தகவல்கள் சேமிப்பாகவில்லை

இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

டிசம்பர் 4-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆதார் இணைப்புகளில் பெரும்பாலானோரின் தகவல்கள் மின்வாரிய பதிவு தொகுப்பில் சேமிப்பாகவில்லை. இந்த காலக்கட்டத்தில் ஆதார் எண் இணைக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்திருந்தாலும் மின்வாரிய பதிவு தொகுப்பில் இடம்பெறாமல் போய்விட்டது.

அவ்வாறு மின்வாரிய பதிவு தொகுப்பில் சேமிப்பாகாமல் போன ஆதார் தகவல்களை மீண்டும் திரட்ட கணினி மூலம் முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை.

இதனால் எத்தனை பேரின் ஆதார் எண் இணைப்பு முழுமையாக சேமிக்கப்படவில்லை என்பது தெரியவில்லை. அதேவேளையில் மிக சிலருக்கு மட்டுமே ஆதார் எண் இணைப்பு விடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது. பதிவாகாமல் விடுபட்ட ஆதார் இணைப்பு எண்களை கொண்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.

நேரடியாக செல்ல வேண்டும்

அத்தகைய மின்நுகர்வோர்கள் மீண்டும் மின் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் வந்து ஆதாரை இணைத்தவர்களுக்கு எந்த சிக்கலும் வரவில்லை.

ஆன்லைன் மூலம் மின் இணைப்பு எண்ணுடன் மீண்டும் ஆதாரை இணைத்து பார்த்தால் இணைப்பு நடந்துள்ளதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments