புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் தீண்டாமை சம்பவங்கள் தொடர்கின்றனவா? அதிகாரிகள் ஆய்வு நடத்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவு




புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் தீண்டாமை சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றனவா? என்று கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

கழிவுநீர் கலந்த குடிநீர்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த சண்முகம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

இதைதொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அப்பகுதியில் ஆய்வு செய்த போது அப்பகுதியில் இரட்டை டம்ளர் முறையும் வழக்கத்தில் இருந்தது தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை பல கிராமங்களிலும் இதுபோன்ற தீண்டாமை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கவும், கழிவுநீர் கலந்த நீரை குடித்த 30-க்கும் மேற்பட்ட வேங்கைவயல் கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

வழக்குப்பதிவு

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சிலரை கைது செய்து இருப்பதாகவும், உரிய விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, வேங்கைவயல் கிராமத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்றார்.

தீண்டாமை தொடர்கிறதா?

பின்னர் இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டதில் ஏராளமான கோவில்களில் சாதிய பாகுபாடு காட்டப்படுவது தெரியவந்தது. பல்வேறு கிராமங்களில் உள்ள டீக்கடைகளில் இரட்டை குவளை முறையும் பின்பற்றப்படுகிறது.

அதேபோல சில கிராமங்களில் உள்ள குளங்களில் குளிப்பதற்கு குறிப்பிட்ட தரப்பினர் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த தீண்டாமை சம்பவங்கள் தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதனையடுத்து நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். அடுத்த கட்ட விசாரணையை பிப்ரவரி மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments