சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் வாரத்தில் 2 நாட்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தலாம் நிபந்தனைகளுடன் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால அனுமதி
சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் வாரத்தில் 2 நாட்கள் மட்டும் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால அனுமதி வழங்கியது.

விசாரணை

தமிழ்நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டு சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இதையடுத்து கடல்பகுதியில் கரையில் இருந்து 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி மோட்டார் படகு உரிமையாளர்கள், மீனவர்கள் பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்டோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

முந்தைய விசாரணையின்போது, “12 நாட்டிக்கல் மைல்களுக்கு உள்ளாக நிபுணர் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து மீன்பிடிக்கலாம். அதனால் கடல் வளம் அழிந்துவிடும், கடும் பாதிப்பை சந்திக்கும் என்ற வாதத்திற்கு போதிய தரவுகள் இல்லை” என மத்திய அரசின் ஆய்வுக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது என்று வலியுறுத்தி மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் விசாரணை தள்ளிவைக்கப்பட்டிருந்தது.

2 நாட்களுக்கு அனுமதி

இந்த நிலையில் இடைக்கால தடை கோரிய மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஏ.எஸ்.போபன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. அவர்கள் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

அனைவரின் நலன் கருதி, சிறப்பு பொருளாதார மண்டல பகுதிக்குள் (12 முதல் 200 கடல் மைல்) சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க சில கட்டுப்பாடுகளுடன் மீன்பிடிக்க இடைக்கால அனுமதி வழங்கப்படுகிறது.

வாரத்தில் 2 நாட்கள் திங்கட்கிழமை, வியாழக்கிழமை மட்டும் இந்த இடைக்கால அனுமதி பொருந்தும். மீன்வளத்துறையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும்.

காலை 8 மணிக்கு புறப்பட்டு அதிகபட்சம் மாலை 6 மணிக்குள் இந்த படகுகள் கரை திரும்ப வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments