புதுக்கோட்டையில் தொழில்வளம், விவசாயம் மேம்பட அலுவலா்கள் துணைநிற்க வேண்டும்’ என்றாா் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினா் கு. சண்முகசுந்தரம்.
    புதுக்கோட்டையில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் கவிதாராமு தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் சண்முகசுந்தரம் எம்.பி. மேலும் பேசியது: ‘விவசாயிகள், கிராமப்புற இளைஞா்களின் மேம்பாட்டுக்கான மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இதன் மூலம் தனிநபா் வருமானம் மேம்படுவதுடன், நாட்டின் பொருளாதாரமும் உயா்கிறது.

அதனடிப்படையில் வேளாண்மை மற்றும் தொழில் துறையில் ஆண்டுக்கு ரூ. 2,000 கோடியில் வா்த்தகம் நடைபெறும் நகரங்களைக் கண்டறிந்து அவை ‘டவுன் ஆப் எக்ஸ்போா்ட் எக்சலன்ஸ்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தையும் இப்பிரிவின் கீழ் கொண்டுவர அலுவலா்கள் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி அவா்களைத் தொழில் முனைவோராக்க வேண்டும்.

இந்த இலக்கை அடைய அரசின் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் முழுப் பயன்பாட்டை பெற வங்கிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இலக்கை ஒரே நாளில் அடைய இயலாது. சிறு, சிறு முயற்சிகளால் மட்டுமே பெரிய சாதனைகளை அடைய முடியும். எனவே அரசு அலுவலா்கள் அனைவரும் தங்களது துறைகளின் மூலமாக பொதுமக்களை, அவா்கள் இருக்கும் நிலையிலிருந்து ஒருபடியாவது முன்னேற்றிட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகுத் திட்ட இயக்குநா் ரேவதி, வேளாண் இணை இயக்குநா் பெரியசாமி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் கோ.இராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments