மாநில அளவில் முதலிடம்: நெல் சாகுபடியில் சாதனை படைத்தது எப்படி? விருது பெற்ற புதுக்கோட்டை பெண் விவசாயி விளக்கம்
நெல் சாகுபடியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது எப்படி? என்பது குறித்து விருது பெற்ற புதுக்கோட்டை பெண் விவசாயி கூறினார்.

நெல் சாகுபடி

சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயல் கிராமத்தை சேர்ந்த வசந்தா என்ற விவசாயிக்கு திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து அதிக மகசூல் பெற்றதற்காக சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருதை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் அவருக்கு ரூ.5 லட்சமும், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்பட்டது.

நெல் சாகுபடியில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தது எப்படி? என்பது குறித்து வசந்தா கூறியதாவது:- நான் பிளஸ்-2 வரை படித்துள்ளேன். எங்களது குடும்பம் விவசாய பின்னணி கொண்டதாகும். எனக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. விவசாயத்தை நானும், எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கவனித்து வந்தோம்.

இயற்கை உரம்

திருந்திய நெல் சாகுபடிக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பணிகளை செய்தோம். இதற்காக நாற்றாங்கால் விதைகளும் அவர்களது அறிவுரைப்படி செய்யப்பட்டது. நாற்று நடவு செய்தபின்னும் தொடர்ந்து அவர்களது அறிவுரைப்படி உரமிட்டு கவனிக்கப்பட்டது. இயற்கை உரம் அதிகம் பயன்படுத்தப்பட்டது. வேப்பங்கொட்டையை அரைத்து பொடியாக்கி பயன்படுத்தப்பட்டது.

மலைப்பகுதியில் உள்ள தழைகளையும் தண்ணீரில் கலந்து உரமாக பயன்படுத்தினோம். வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்திய உரங்களும் இடப்பட்டன. இதனால் நோய் தாக்குதல் இன்றி நல்ல மகசூல் கிடைத்தது. இந்த விருதை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. கடினமாக உழைத்தால் பயன் இருக்கத்தான் செய்யும். விவசாயத்தில் நல்ல லாபமும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

2 முறை முயற்சி

வசந்தாவின் கணவர் கணேசன் கூறுகையில், ‘‘இந்த விருதை பெறுவதற்காக ஏற்கனவே கடந்த 2 முறை முயற்சி செய்தோம். ஆனால் சரியான சாகுபடி இல்லை. கடந்த 2021-ம் ஆண்டில் இதற்காக முயற்சி செய்து பதிவு செய்தோம். 6 ஏக்கர் பரப்பளவில் சி.ஆர்.1009 சப்-1 எனும் ரக நெல்லை நடவு செய்தோம். 2½ ஏக்கரில் 14 ஆயிரத்து 451 கிலோ 25 கிராம் மகசூல் கிடைத்தது. மாநிலத்தில் வேறு எவரும் இதுபோல் உற்பத்தி செய்யவில்லை.

இந்த அறுவடையானது கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. அதற்கான விருது தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த நெல் ரக அரிசியானது இட்லி அரிசி வகையை சேர்ந்ததாகும்'' என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments