பட்டா, சான்றிதழ் பெற வரும் பொது மக்களை அலைக்கழிக்க கூடாது அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்




பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களின் பயனடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும் என்றும், இதற்காக மக்களை அலையவைக்க கூடாது என்றும் கலெக்டர்கள், அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

4 மாவட்ட கலெக்டர்களுடன் ஆய்வு

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின் கீழ் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குறைகளை கண்டுபிடிக்கும்...

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் நடைபெறும் முதலாவது கூட்டம். இந்த கள ஆய்வை வேலூரில் இருந்து தொடங்கியதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன். இந்த கூட்டத்தை பொறுத்தவரைக்கும் ஏதோ குறைகளை கண்டுபிடிப்பதற்காக நடத்துகின்ற கூட்டம் அல்ல. இதனுடைய நோக்கம் அது அல்ல. மக்களுக்கான பணி சிறக்க வேண்டும் என்பதை நோக்கமாக கருதித்தான் இந்த கூட்டத்தை கூட்டி இருக்கிறோம்.

நிர்வாகம் நல்ல வகையில் மேம்பட வேண்டும். தொய்வுகளை நீக்க வேண்டும். நம்முடைய பணிகளில் காணக்கூடிய இடர்களை எல்லாம் குறைக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும். உங்களை உற்சாகப்படுத்துவதற்கும், உங்கள் பிரச்சினையை நேரடியாக அறிவதற்கும்தான் இந்த ஆய்வு கூட்டம். கடந்த 20 மாத காலத்தில் நாம் ஆட்சிக்கு வந்து, எத்தனையோ திட்டங்களை தீட்டி இருக்கிறோம். அப்படி தீட்டிய திட்டங்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட பணிகளை நிறைவேற்றி காட்டி இருக்கிறோம். இந்த களப்பணி மற்றும் ஆய்வு கூட்டத்தை பயன்படுத்தி கொண்டு துறை தலைவர்களும், அரசு செயலாளர்களும் உரிய தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அலைக்கழிக்க கூடாது

நிதி தேவை அல்லது பணியாளர் பற்றாக்குறை இருந்தால் அதை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையை கவனித்து வந்தாலும் யாரும் தனியாக செயல்பட முடியாது. அப்படி செயல்பட முற்பட்டால் அது தாமதத்திற்குதான் வழிவகுக்கும். அரசு துறைகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அதனால், பலரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் அடிப்படையான வழிமுறை.

பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுதல், அரசு நலத்திட்டங்களின் பயனடைதல் ஆகியவை எளிமையாக நடைபெற வேண்டும். மக்கள் இதற்காக சில இடங்களில் அலைய வைக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர்கள் கண்காணித்து தடுக்க வேண்டும்.

ஒவ்வொரு திட்டமும் என்ன நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் சிதையாமலும், அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றி காட்டும் வகையிலும் உங்களது செயல்பாடுகள் அமைய வேண்டும்.

பல்வேறு நிதி அமைப்புகளிடம் அரசு கருவூலத்தில் இருக்கும் பணத்தின் மூலமாக மட்டுமல்ல, கடன் வாங்கியும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. மக்களின் வரிப்பணமும் அரசின் நிதியில் உள்ளது. திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்குள் குறைவாக செலவு செய்து பணியை முடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

அடுத்த மாதம் தமிழக பட்ஜெட்

அடுத்த மாதத்தில் (மார்ச்) தமிழ்நாடு அரசினுடைய பட்ஜெட் தாக்கல் ஆக இருக்கிறது. அதன்பிறகு, அமைச்சருடைய துறை மானியக் கோரிக்கைகள் தாக்கல் ஆக இருக்கிறது. புதிய, புதிய திட்டங்கள் ஏராளமாக சேர்ந்துவிடும். அதற்கு முன்னதாகவே, இதுவரை அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் வெகுசிறப்பாக செயல்பட வேண்டும் என்பதுதான் ‘கள ஆய்வில் முதல்-அமைச்சர்’ என்ற திட்டத்தின் நோக்கம். அதற்கு இந்த ஆய்வு கூட்டம் ஒரு சிறப்பான முதல் படியாக அமைந்திருக்கிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கலந்துகொண்டோர்

இதில் தலைமை செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர்-வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார்.

சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முதன்மைச் செயலாளர் த.உதயச்சந்திரன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ஆனந்தகுமார், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும் 4 மாவட்ட கலெக்டர்கள், உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments