மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு: வேகமெடுக்கும் தெற்கு ரயில்வே திட்டங்கள்
மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், ரயில் பாதை திட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு ரயில்வேயில் புதிய ரயில் பாதைகள் அமைத்தல், யார்டு பராமரிப்பு, பாலங்கள், தண்டவாளங்கள் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றுக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ.11,313 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக புதிய பாதை அமைக்க ரூ.1,158.15 கோடி, அகலப் பாதை அமைக்க ரூ.475.78 கோடி, இரட்டைப் பாதை பணிக்கு ரூ.1,564.88 கோடி, ரயில் பாதை புதுப்பித்தல் பணிக்கு ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு 11 புதிய பாதை திட்டங்களுக்கு ரூ.59 கோடியே 10 ஆயிரம் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ராமேசுவரம்-தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்துக்கு மட்டும் ரூ.59 கோடியும், மீதமுள்ள 10 திட்டங்களுக்கு அடையாளத் தொகையாக தலா ஆயிரம் ரூபாயும் ஒதுக்கப்பட்டது. ஆனால், நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் புதிய பாதை திட்டத்துக்கு ரூ.1,158.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை திட்டத்துக்கு (70 கி.மீ.) ரூ.50 கோடி, திண்டிவனம்-நகரி (179.2 கி.மீ.) திட்டத்துக்கு ரூ.100 கோடி, அத்திப்பட்டு-புத்தூர்திட்டம் (88.30 கி.மீ.), ஈரோடு-பழனி (91.05 கி.மீ.) திட்டத்துக்கு தலா ரூ.50 கோடி, சென்னையில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூர் (179.28 கி.மீ) திட்டத்துக்கு ரூ.50 கோடி, மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி (143.5 கி.மீ.) திட்டத்துக்கு ரூ.114 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி (60 கி.மீ.) திட்டத்துக்கு ரூ.57.99 கோடி, மொரப்பூர்-தருமபுரி (36 கி.மீ.) திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ராமேசுவரம் - தனுஷ்கோடி (17.2 கி.மீ.) திட்டத்துக்கு ரூ.385.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அகலப் பாதை திட்டம்

அகலப் பாதை திட்டத்துக்கு கடந்த ஆண்டு ரூ.346.80 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டு ரூ.475.78 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாகை - திருக்குவளை - திருத்துறைப்பூண்டி, பேரளம் - காரைக்கால் திட்டத்துக்கு ரூ.183.54 கோடி, கடலூர் - விருத்தாசலம் - சேலம் (191 கி.மீ.) திட்டத்துக்கு ரூ.63.50 கோடி, விழுப்புரம் - காட்பாடி (161 கி.மீ.) திட்டத்துக்கு ரூ.18.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை - மன்னார்குடி திட்டத்துக்கு ரூ.43.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரட்டை பாதை திட்டங்களுக்கு கடந்த ஆண்டு ரூ.1,445.85 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டு ரூ.1,564.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பல தடங்களில் இரட்டைப் பாதை அமைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி (160 கி.மீ.) இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரூ.40 கோடி, மணியாச்சி - நாகர்கோவில் (102 கி.மீ.) இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரூ.130 கோடி, திருவனந்தபுரம் - கன்னியாகுமரி (86.56 கி.மீ.) இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரூ.808 கோடி, காட்பாடி - விழுப்புரம் இரட்டைப் பாதை திட்டத்துக்கு (160.10 கி.மீ.) ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சென்னை கடற்கரை - கொருக்குப்பேட்டை 3-வது பாதை (4.1 கி.மீ.) திட்டத்துக்கு ரூ.8.10 கோடி, சென்னை கடற்கரை - அத்திப்பட்டு இடையே 4-வது பாதை திட்டத்துக்கு (22.1கி.மீ) ரூ.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில், தெற்கு ரயில்வேக்கு கடந்த ஆண்டைவிட அதிகநிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், ரயில்பாதை பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி டி.மனோகரன் கூறும்போது, ‘‘புதிய பாதை திட்டங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு, போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, தொடர்ந்து ஒதுக்கினால், முடங்கிய பணி அனைத்தும் விரைந்து முடியும்’’ என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments