28-ந்தேதி இறுதி காலக்கெடு: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் கால அவகாசம் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு 28-ந்தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

ஆதார் எண் இணைப்பு

ஈரோட்டில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் ஒப்புதலுடன் தமிழக அரசின் மின் ஆளுமை முகமையின் அனுமதி பெற்று தமிழ்நாட்டில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்களின் மின் இணைப்பு எண்ணை அவர்களது ஆதாருடன் இணைக்கும் பணியானது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் 15.11.2022 முதல் ஆன்லைன் மூலமாகவும், 28.11.2022 முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்ட்டர்கள் மூலமாகவும் தொடங்கி வைக்கப்பட்டன.

பணிகளை முடிப்பதற்கு முதற்கட்டமாக 31.12.2022 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க காலக்கெடுவானது 31.1.2023 வரை நீட்டிக்கப்பட்டது.

7.21 லட்சம் பேர் இணைக்கவில்லை

ஜனவரி மாதத்தில் தைப்பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்கள் அதிகம் இருந்ததால், 15.2.2023 வரை மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு இறுதியாக கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

தொடங்கிய நாள் முதல் 15-ந்தேதி (நேற்று) மதியம் 1 மணி வரை 2 கோடியே 60 லட்சத்து 58 ஆயிரம் மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைத்திருக்கிறார்கள். இது மொத்தமுள்ள 2 கோடியே 67 லட்சத்து 79 ஆயிரம் மின் நுகர்வோர்களில் 97.31 சதவீதம் ஆகும். மீதம் உள்ள 7.21 லட்சம் (2.69 சதவீதம்) மின் நுகர்வோர்கள் அவர்களது மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை.

28-ந்தேதி கடைசி நாள்

மீதமுள்ள பொதுமக்களும் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்காக வருகின்ற 28-ந்தேதி வரை காலக்கெடு இறுதியாக நீட்டிக்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த கால நீட்டிப்பு அவகாசத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments