தஞ்சை- விக்கிரவாண்டி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரம் இந்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தஞ்சை - விக்கிரவாண்டி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் இந்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வருமா? என பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

நான்கு வழிச்சாலைபணிகள்

தஞ்சை - விக்கிரவாண்டி இடையே நான்கு வழிச்சாலை பணிகள் ரூ.3 ஆயிரத்து 517 கோடியில் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட இடத்தை சமன்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சாலை பணிகளை 2023-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் தேசிய நெடுஞ்சாலைகள் மட்டும் 4 ஆயிரத்து 873 கிலோ மீட்டர் நீளமும், மாநில நெடுஞ்சாலைகள் 10 ஆயிரத்து 549 கி.மீ. நீளமும் உள்ளன. இதுதவிர மாவட்ட முதன்மை சாலைகள் 11 ஆயிரத்து 315 கி.மீ நீளமும், இதர சாலைகள் 34 ஆயிரத்து 937 கி.மீ. நீளமும், உள்ளாட்சி சாலைகள் 90 ஆயிரத்து 509 கி.மீ. நீளமும் உள்ளன.

கும்பகோணத்திற்கு செல்ல 2 மணிநேரம்

தஞ்சை - கும்பகோணம் - விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரையிலான சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஓரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட நேரம் பயணமாகும் நிலை ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக தஞ்சையிலிருந்து - கும்பகோணத்திற்கு செல்வதற்கு (50 கி.மீ. தூரமும்) 1½ மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ஆகிறது. இந்த சாலைகளும் மோசமான நிலையில் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு தஞ்சையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வரையிலான 165 கிலோ மீட்டர் தூரம் நீளமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 4 வழிச்சாலைகளாக கடந்த 2006-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது.

ரூ.1,200 கோடி ஒதுக்கீடு

மேலும் இந்த சாலையை 4 வழிச்சாலையாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 2010-ம் ஆண்டில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு, கடந்த 2015 -ம் ஆண்டு தஞ்சை - விக்கிரவாண்டி சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் புதிதாக அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாக்குவதை கருத்தில் கொண்டு விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையிலும் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3 ஆயிரத்து 517 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து தஞ்சையில் இருந்து விக்கிரவாண்டி வரையில் 4 வழிச்சாலைகள் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின. தற்போது வரை 90 சதவீதத்துக்கும் மேல் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்தப்பட்டதையடுத்து சாலை அமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளன. இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.3 ரெயில்வே மேம்பாலங்கள்

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு வரை ஒரு பிரிவாகவும், சேத்தியாதோப்பில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் வரை 2 -வது பிரிவாகவும் சோழபுரத்தில் இருந்து தஞ்சை மாரியம்மன் கோவில் பைபாஸ் சாலை வரை 3 -வது பிரிவாகவும் பணிகளை ஒதுக்கியது.

இதில் முதல் பிரிவான விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு வரை ரூ.711 கோடி மதிப்பீட்டில் 66 கி.மீ. நீளத்தில் சாலை அமைக்கும் பணியில் கெடிலம், தென்பண்ணை உள்ளிட்ட ஆறுகளின் மேல் 26 ஆற்று பாலங்களும், 27 சாலை மேம்பாலங்களும், 3 ெரயில்வே மேம்பாலங்களும், 2 கனரக வாகன நிறுத்துமிடங்களும், பண்ருட்டி, வடலூர் ஆகிய பகுதிகளில் 2 புறவழிச் சாலையிலும், 1 சுங்கச்சாவடியும் அமைக்கப்பட உள்ளன.

2-வது பிரிவான சேத்தியாதோப்பு முதல் கும்பகோணம் தாராசுரம் வரை ரூ.1,461 கோடியில் 50.275 கி.மீ. நீளத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் பின்னலூர், சேத்தியாதோப்பு, அணைக்கரை, திருப்பனந்தாள் என 16 கி.மீ. நீளத்துக்கு புறவழிச் சாலைகளும், ரூ.100 கோடியில் அணைக்கரை பாலம் உள்பட 34 ஆற்றுப்பாலங்களும், ஜெயங்கொண்டம் கூட்டு ரோடு, மீன்சுருட்டி, குமாரக்குடி, சோழதரம் உள்ளிட்ட பகுதிகளில் 23 மேம்பாலங்களும், 1 சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளன. 3 -வது பகுதியான தாராசுரம் முதல் தஞ்சை மாரியம்மன் கோவில் புளியந்தோப்பு வரை ரூ.1,345 கோடி மதிப்பீட்டில் 48 கி.மீ. நீளத்தில் அமைக்கப்படுகிறது.

தார்சாலைகள் அமைக்கும் பணி

இதில் கும்பகோணத்தில் உள்ள காவேரி ஆறு, வடவாறு ஆகிய ஆறுகள் உட்பட 62 இடங்களில் ஆற்றுப் பாலங்களும், தாராசுரம் பகுதியில் 1 ெரயில்வே மேம்பாலமும், வளையபேட்டை, ராஜகிரி, திருக்கருகாவூர் ஆகிய இடங்களில் 20 சாலை மேம்பாலங்களும், 1 சுங்கச்சாவடியும் அமைக்கப்பட உள்ளன. சுமார் 150 அடி அகலத்திற்கு 4 வழிச்சாலைகள் அமைப்பதற்காக, தற்போது 180 அடிக்கு அகலமாக (60 மீட்டர்) மண் சாலையில் அமைக்கும் பணிகள் அனைத்து பகுதிகளிலும் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தார் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.


இந்த ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கு வருமா?

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

சாலைப்பணிகள் அனைத்தும் 2023-ம் ஆண்டு இறுதிக்குள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும். தற்போது பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சைக்கு சுமார் 5 மணி நேரம் பயண நேரத்தை புதிய 4 வழி பைபாஸ் சாலை வழியாக சென்றால் 3 மணி நேரத்தில் செல்லலாம். இந்த சாலையில் கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் மற்றும் தஞ்சை மாவட்டம் மானம்பாடி மற்றும் சூலமங்கலம் அருகில் உள்ள வேம்புக்குடி ஆகிய மூன்று இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட உள்ளன. மேலும் தஞ்சையிலிருந்து - கும்பகோணத்திற்கு தற்போது 1½ மணி நேரம் ஆகிறது. புதிய பைபாஸ் சாலையில் சென்றால் சுமார் 40 நிமிடத்திற்குள் செல்லலாம் என்றார்.

தஞ்சை - விக்கிரவாண்டி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடைந்து இந்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வருமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments