வேங்கைவயலில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம்: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் முற்றுகை நுழைவுவாயில் கதவு இழுத்து மூடல்; மறியலுக்கு கிராம மக்கள் முயன்றதால் பரபரப்பு
வேங்கைவயலில் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை இறையூர் கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து, கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் கதவு இழுத்து மூடப்பட்டது. பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேங்கைவயல் விவகாரம்

புதுக்கோட்டை அருகே வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மர்ம ஆசாமிகள் அசுத்தம் செய்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. இதனால் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட பின்பும் விசாரணை தான் நடைபெற்று வருகிறது. யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கிய இந்த விவகாரத்திற்கு இதுவரை முற்றுப்புள்ளி வைக்கப்படாமல் நீடித்து வருகிறது. சம்பந்தப்பட்ட மேல் நிலைநீர்த்தேக்க தொட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவ்வப்போது போராட்டமும், பதற்றமும் காணப்படுகிறது.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 4 பேர் நேற்று முன்தினம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றக்கோரி கையில் சுத்தியலுடன் குடிநீர் தொட்டி மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்க வைத்தனர். இந்த சம்பவத்தில் அவர்களை சாதாரண வழக்கில் கைது செய்து போலீசார் விடுவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மற்றொரு தரப்பை சேர்ந்த இறையூர் கிராம மக்கள், முத்துக்காடு ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். வேங்கைவயலில் மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் தடையை மீறி ஏறி போராட்டம் செய்த நபர்கள் மீது கடுமையான வழக்குப்பதிவு செய்து அவர்களை சிறையில் அடைக்க வேண்டும். பாதுகாப்பையும் மீறி யாருடைய தூண்டுதலின் பேரில் அந்த குடிநீர் தொட்டியின் மேல் ஏறி போராட்டம் நடத்தினார்கள் என விசாரிக்க வேண்டும் எனக்கோரி முற்றுகையிட்டனர். மேலும் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

144 தடை உத்தரவு

இந்த போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ராகவி, திருக்கோகர்ணம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வேங்கைவயல் கிராமத்தில் வெளியாட்கள் நுழையக்கூடாது. அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும். குடிநீர் தொட்டியில் ஏறி போராட்டம் நடத்தியவர்களை சிறையில் அடைக்க வேண்டும். குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். எங்கள் பகுதியை சேர்ந்த 3 சிறுவர்கள் தான் குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்ததாக சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கலெக்டரின் காரை முற்றுகையிட முயற்சி

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் தொடர்ந்து தா்ணாவில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலுக்கு முயன்றனர். அப்போது அந்த நேரத்தில் கலெக்டர் கவிதாராமு காரில் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே சென்ற போது காரை முற்றுகையிட பொதுமக்கள் முயன்றனர். ஆனால் கார் வேகமாக கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றது.

இதையடுத்து, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே சென்று கலெக்டரிடம் மனு அளிக்க முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மொத்தமாக செல்ல அனுமதி மறுத்து முக்கிய நபர்கள் மட்டும் செல்லும்படி கூறினர். இதையடுத்து முத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முத்தையா தலைமையில் பொதுமக்கள் சிலர் கலெக்டர் கவிதாராமுவை சந்தித்து மனு அளித்தனர்.

நுழைவுவாயில் இழுத்து மூடல்

இதற்கிடையில் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக்கோரி அங்கிருந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு, கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் கதவை இழுத்து மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர். பொதுமக்கள் சிலர் சாலை மறியலுக்கு முயன்றனர். கலெக்டரிடம் மனு அளித்து விட்டு வந்த பின் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

இந்த மனுவை பெற்ற கலெக்டர் கவிதாராமு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. அதுவரை கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments