அரசு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி




அரசு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

அமைச்சர் பேட்டி

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தாலிக்கு தங்கம் திட்டம்

பிறந்த குழந்தைகள், கர்ப்பிணிகள் சத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தாலிக்கு தங்கம் திட்டத்தை முற்றிலும் கைவிட்டுவிட்டதாக சொல்லக்கூடாது. அந்த திட்டத்தை மாற்றி இருக்கிறோம்.

அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் திட்டத்தை முறையாக செய்யாமல் விட்டுவிட்டார்கள். இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்த்தபோது 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகள் கல்வி அறிவு பெற, அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் புதுமைப்பெண் திட்டத்தில் ரூ.1000 வழங்கி வருகிறோம்.

வரவேற்பு

தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயன்பெறுவதை காட்டிலும் புதுமைப்பெண் திட்டத்தில் பெண் குழந்தைகள் அதிகம் பயன்பெறுகிறார்கள் என்பதை உறுதி செய்ய முடிகிறது.

பெண் குழந்தைகள் எதிர்காலத்தில் சொந்தகாலில் நிற்க வேண்டும் என்பதற்கு கல்வி அறிவு எவ்வளவு முக்கியம் என்பதை பறைசாற்றும் வகையில் தான் இந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறோம். இதற்கு பெரிய வரவேற்பு உள்ளது.

நீட் தேர்வுக்கான பயிற்சி

நீட் தேர்வுக்கு எதிராக ஒரு பக்கம் சட்ட போராட்டம் நடந்து வருகிறது. இருந்தாலும் மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக 2021-22-ம் ஆண்டில் 1 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் இடைநின்றது கண்டறியப்பட்டு அவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்த மாணவர்களை பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் பொதுத்தேர்வை இந்த ஆண்டு 6 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் தான் எழுதி இருப்பார்கள். 8 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுத வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பணிகளை மேற்கொண்டோம்.

ஜூன் மாதம் தேர்வு

தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. வழக்கமாக 4.5 சதவீதம் அல்லது 4.6 சதவீதம் பேர் தான் தேர்வு எழுதாமல் இருப்பார்கள். இந்த ஆண்டு 5 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் தேர்ச்சி பெறாத மாணவர்களுடன் சேர்த்து அரசு பொதுத்தேர்வுக்கு வராதவர்களையும் இணைத்து சிறப்பு பயிற்சி அளித்து வரும் ஜூன் மாதத்தில் தேர்வு எழுத வைப்போம். அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு உள்ளது. அதை படிப்படியாக செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments