கறம்பக்குடியில் தேர்வு கட்டண உயர்வை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
தேர்வு கட்டண உயர்வை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்வு கட்டணம் உயர்வு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் பிற கட்டணங்களும் உயர்த்தப்பட்டு உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

அதன்படி புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் வசந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தோஷ்குமார் கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வகுப்புகளை புறக்கணித்து...

கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் நேற்று 1 மணிநேரம் வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி நுழைவு வாயில் முன்பாக பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாரதிதாசன் பல்கலைக்கழகம் உயர்த்திய தேர்வு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பை உறுதி செய்ய கோரியும், மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தடுக்க வேண்டியும் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கல்லூரி வகுப்புக்கு சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments