திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து : 2 கார்கள் நேருக்கு நேர் மோதல்; 3 பேர் பலி

கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது 2 கார்கள் நேருக்கு நேர் மோதியது. இதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


சாமிதரிசனம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவர் தனது தாயார் வெள்ளையம்மாள் (48), மனைவி நீலவேணி (25), அக்காள் மகள் மகிஷாஸ்ரீ (12), மாமியார் சுமதி (45) ஆகியோருடன் சேலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காலை காரில் புறப்பட்டு சென்றார். காரை அறந்தாங்கியை சேர்ந்த கதிர் (28) என்பவர் ஓட்டி சென்றார். பின்னர் அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு தங்களுடைய வீட்டிற்கு காரில் சென்று கொண்டு இருந்தனர்.

கார்கள் நேருக்கு நேர் மோதல்

இதேபோல் ராமேசுவரத்தில் இருந்து சேலம் நோக்கி 6 பேர் காரில் சென்று கொண்டு இருந்தனர். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் பாரதிதாசன் கலைக்கல்லூரி பிரிவு அருகே நேற்று இரவு 10.15 மணியளவில் 2 கார்களும் சென்றபோது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் கார்களில் சென்ற 12 பேரும் படுகாயம் அடைந்து வலியால் துடித்தனர்.

இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மாத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

3 பேர் பலி

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த அனைவரையும் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கார் டிரைவர் கதிர், சுமதி, மகிஷாஸ்ரீ ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

இதையடுத்து, படுகாயம் அடைந்த 9 பேருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments