பெண்களுக்கு என தனியாக 4 இருக்கைகள் ஒதுக்கீடு: அரசு விரைவு பஸ்களில் மாதம் 5 முறைக்கு மேல் பயணித்தால் 50 சதவீத கட்டண சலுகை சட்டசபையில் அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு






அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணித்தால் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும் என்றும், அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களில் பெண்களுக்கு 4 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் அறிவித்துள்ளார்.

பெண்களுக்கு 4 இருக்கைகள்

தமிழக சட்டசபையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது:-

* அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களில் பெண்களுக்கென 4 இருக்கைகள் ஒதுக்கப்படும். பயண நேரத்துக்கு 24 மணி நேரம் முன்பு வரை இணையதள முன்பதிவில் பெண் பயணிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.

* அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் உள்ள உணவகங்களை நடத்துவதற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

* அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் உள்ள பணியாளர்கள் ஓய்வு அறைகளில் ஏ.சி. வசதி செய்யப்படும்.

* உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் நகரில் புதிய பஸ் பணிமனை அமைக்கப்படும்.

* உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் ஆவடி பஸ் பணிமனை மற்றும் பஸ் நிலையம், பாடியநல்லூர் பஸ் பணிமனை மற்றும் பஸ் நிலையம் மேம்படுத்தப்படும்.

50 சதவீத கட்டண சலுகை

* அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களில் உள்ள பயண சுமை பெட்டிகள் ஒரு மாதத்துக்கு ரூ.6 ஆயிரம் வீதம் வாடகை அடிப்படையில் இளைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். பஸ்கள் புறப்படும் மற்றும் சேரும் இடங்களுக்கு இடையே விவசாய பொருட்கள் அல்லது தொழில்துறை தயாரிப்புகளை பார்சல் மூலம் அனுப்ப இந்த பயண சுமை பெட்டிகளை பயன்படுத்தலாம். இந்த திட்டம் ஓராண்டுக்கு மட்டுமே பொருந்தும்.

* அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களில் ஒரு காலண்டர் மாதத்தில் 5 முறைகளுக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகையாக 6-வது பயணம் முதல் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். இந்த சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்களுக்கும் பொருந்தும்.

* அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணிமனை அளவில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும்.

* அரசு போக்குவரத்துக்கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

ஓட்டுனர் தேர்வுத்தளம்

* பொதுமக்களின் நலன் கருதி அரசின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் 54 மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களை உள்ளடக்கிய மொத்தம் 145 அலுவலகங்களில் ஓட்டுனர் தேர்வு நடத்தும் பொருட்டு 145 எண்ணிக்கையில் ரூ.6.25 கோடியில் இலகு ரக மோட்டார் வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள 20 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுனர் தேர்வுத்தளம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும்.

* சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்த ரூ.5 ஆயிரம் தொகையுடன், மாநில அரசின் பங்களிப்பாக சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து கூடுதல் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

ஸ்ரீரங்கத்தில் தானியங்கி சோதனை நிலையம்

* ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வராமலேயே ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு தொடர்பான 42 சேவைகளை இணையதளம் மூலம் பொதுமக்கள் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* 1989-ம் வருட தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் கூறப்பட்டுள்ள விதிகள் 7,8,9,10-ன் படி போக்குவரத்து வாகனங்களை இயக்குவதற்கு ஓட்டுனர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பொதுப்பணி வில்லை பெறவேண்டும். பிற மாநிலங்களில் (கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா) இலகு ரக போக்குவரத்து வாகனம் இயக்க பொதுப்பணி வில்லை தேவை இல்லை என்ற நிலை உள்ளது. எனவே, இலகு ரக வாகனங்கள் இயக்க ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள், அனைத்து இலகு ரக போக்குவரத்து வாகனங்களையும் பொதுப்பணி வில்லை பெறாமலேயே இயக்க வசதியாக 1989-ம் வருட தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் கூறப்பட்டுள்ள விதிகள் 7,8,9,10 ஆகியவற்றை நீக்கம் செய்ய அறிவிக்கை செய்யப்படும்.

* போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்க தனியார் பங்களிப்பின் மூலமாக செங்குன்றம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திண்டிவனம், சேலம் (மேற்கு), ஸ்ரீரங்கம், தஞ்சாவூர், திருப்பூர் (வடக்கு), கோவை (வடக்கு), நாமக்கல் (வடக்கு), ஈரோடு (கிழக்கு), திண்டுக்கல், மதுரை (தெற்கு), ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 18 வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட இடங்களில் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைக்கப்படும்.

மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments