புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர், நமணசமுத்திரம் காவல் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு 

 
மாத்தூர், நமணசமுத்திரம் காவல் நிலையங்களில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
  
தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக காரில் ராமநாதபுரத்திற்கு சென்றார். 

அப்போது திருச்சி- புதுக்கோட்டை சாலையில் காலை 11.45 மணியளவில் மாத்தூர் போலீஸ் நிலையத்தை கடந்து சென்ற டி.ஜி.பி.யின் கார் திடீரென திரும்பி வந்து மாத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்றது. இதையடுத்து, மாத்தூர் போலீசார் டி.ஜி.பி.யை வரவேற்றனர். இதை தொடர்ந்து மாத்தூர் போலீஸ் நிலையத்தின் உள் மற்றும் வெளிப்பகுதி வளாகம் ஆகியவற்றை சுற்றிப் பார்த்த டி.ஜி.பி. சைலேந்திரபாபு போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் வழக்கு தொடர்பான பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து மாத்தூர் போலீஸ் நிலையத்தை சிறப்பான முறையில் தூய்மையாக பராமரித்து வருவதற்கும், வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருவதையும் பாராட்டி மாத்தூர் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி உள்ளிட்ட போலீசாருக்கு ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கி பாராட்டினார். 

பின்னர் 15 நிமிடங்களுக்கு பிறகு போலீஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் திருமயம் அருகே உள்ள நமணசமுத்திரம் போலீஸ் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் வழக்கு தொடர்பான பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர் நமணசமுத்திரம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரை பாராட்டி ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கினார். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments