ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிப்பு கலெக்டர், எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுப்பார்களா?
ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணியால் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதால் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதிய பஸ் நிலையம்

ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு முன்பு ரெயில் நிலையம் எதிரில் பழைய பஸ்நிலையம் செயல்பட்டு வந்தது. இதன்பின்னர் மக்கள் தொகை பெருக்கம், மாவட்ட வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் பழைய பஸ்நிலையம் போதிய வசதிகள் இன்றி இருந்ததால் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்படி கடந்த 1986-ம் ஆண்டு ராமநாதபுரம் நகர் மைய பகுதியில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டது. இந்த பஸ்நிலையம் அப்போதைய மக்கள் தொகை மற்றும் பஸ்களின் எண்ணிக்கைக்கு போதுமானதாக இருந்தது.

ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, சென்னை, திருச்சி, ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் சென்று வந்தன. மக்களின் தேவை அதிகரித்ததன் காரணமாக பஸ்களின் எண்ணிக்கையும் அதிகரித்ததால் ராமநாதபுரம் பஸ்நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லவும், பயணிகள் ஏறிச்செல்லவும், பஸ்கள் நிற்கவும் முடியாமல் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக புதிய பஸ்நிலையம் கட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மக்களிடையே அதிருப்தி

இதனை தொடர்ந்து ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நகரசபை தலைவர் கார்மேகம் உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை வைத்ததன் பயனாக ரூ.20 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்ட அரசு அனுமதி அளித்தது. அதன்படி ராமநாதபுரம் புதிய பஸ்நிலையத்தை இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்து பஸ்நிலையம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28-ந் தேதி டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பஸ்நிலையத்தில் உள்ள கடைகளை 15 நாட்களுக்குள் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடைகளை காலி செய்ததும் இந்த மாத இறுதிக்குள் பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பஸ்நிலையம் இடிக்கப்பட உள்ளதால் அதற்கு மாற்றாக ராமநாதபுரம் பழைய பஸ்நிலையம் மற்றும் மதுரை ரோட்டில் நகர் நுழைவு வாயில் பகுதியில் உள்ள மூலக்கொத்தளம் வீட்டுவசதிவாரிய பழைய குடியிருப்பு பகுதியில் இருந்து பஸ்களை இயக்க நகரசபை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புதிய பஸ்நிலையம் கட்டப்பட உள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும், அதற்காக இருவேறு பகுதியில் தற்காலிகமாக பஸ்கள் இயக்கப்படும் என்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தற்காலிகமாக தள்ளி வைக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- பஸ்நிலையத்தை இடித்துவிட்டு புதிய பஸ்நிலையம் கட்டுவது என்பது வரவேற்கத்தக்கது. இருப்பினும் பழைய பஸ்நிலையம் மற்றும் மூலக்கொத்தளம் செல்ல வேண்டும் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். இருக்கும் இடத்திலேயே முதல்கட்ட பணிகளை தொடங்கி மறுவழியில் பஸ்களை சென்று வர நடைமுறைப்படுத்தலாம்.

மேலும், பாம்பன் ரெயில்பாலத்தில் கோளாறு காரணமாக ரெயில்கள் ராமேசுவரம் வரை செல்வது இல்லை. இதனால் பயணிகள் அனைவரும் பஸ் பயணத்தையே நம்பி உள்ளனர். ரெயில்பாதை சரியாகும் வரை பஸ்நிலைய கட்டுமான பணிகளை தற்காலிகமாக தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

விரைந்து முடிக்க

ராமநாதபுரம் நகரசபை தலைவர் கார்மேகம் கூறியதாவது:- ராமநாதபுரம் நகரின் தேவையை கருத்தில் கொண்டு சட்டமன்ற உறுப்பினரின் முயற்சியால் ரூ.20 கோடியில் புதிய டி கிரேடு பஸ்நிலையம் அமைக்கப்பட உள்ளது. பஸ்நிலையத்தை முழுமையாக இடித்து பணிகளை தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்காலிகமாக பழைய பஸ்நிலையம், மூலக்கொத்தளம் பகுதியில் பஸ்கள் சென்றுவரும். இதற்காக மூலக்கொத்தளம் பகுதி வீட்டுவசதி வாரியத்தின் கைவசம் உள்ளதால் அந்த துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளோம்.

சந்தைகடை பகுதியை முழுமையாக எடுத்து பஸ்நிலையம் கட்டப்படவில்லை. குறிப்பிட்ட பகுதியை மட்டுமே கையகப்படுத்தி பஸ்நிலையம் கட்ட உள்ளோம். எனவே, அதில் முதலில் பணிகளை தொடங்கி மேற்கொள்வது சாத்தியமில்லை. பயணிகள், வியாபாரிகள் நலனை கருத்தில் கொண்டு பஸ்நிலைய பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வாழ்வாதாரம் பாதிப்பு

ராமநாதபுரத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக தற்காலிகமாக பழைய பஸ் நிலையம் மதுரை ரோடு, மூலக்கொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் என 2 இடங்களுக்கு பஸ் நிலையத்தை இடமாற்றம் செய்வதால் பொதுமக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதுடன், பஸ் நிலையத்தை நம்பி உள்ள கடை வியாபாரிகள், வாடகை வாகன ஓட்டுனர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் 2 இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டால் பயணிகளுக்கும், வியாபாரிகளுக்கும் தேவையான சுகாதார வளாகம் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்வதில் சிரமம் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் ஒரே இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்தால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

எனவே மாவட்ட கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர், நகர்மன்ற தலைவர் இதையெல்லாம் கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினரையும் அழைத்து பேசி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பணியை மேற்கொள்ள முடிவு எடுக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த பொதுமக்களும், வியாபாரிகளும் எதிர்பார்க்கின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments