காணாமல் போன, திருத்தங்கள் மேற்கொண்ட கார்டுகளுக்கு பதிலாக புதிய ரேஷன் கார்டுகளை தபால் மூலம் பெறும் வசதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்




காணாமல் போன, திருத்தங்கள் மேற்கொண்ட ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய ரேஷன் கார்டுகளை தபால் மூலம் பெறும் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

புதிய ரேஷன் கார்டுகள்

காணாமல் போன, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய ரேஷன் கார்டுகளை இணையதளத்தில் விண்ணப்பித்து பெறும் முறை 2020-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் விண்ணப்பித்தாலும் அதற்குரிய தொகையை செலுத்தவும், புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கும் விண்ணப்பதாரர்கள் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியது இருந்தது. விண்ணப்பதாரர்கள், வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு செல்லாமல் இணைய வழியிலேயே புதிய ரேஷன் கார்டுக்கான பணத்தை செலுத்திடும் வகையிலும், தபால் மூலமாக புதிய ரேஷன் கார்டை பெற்றுக்கொள்ளும் புதிய வசதியும் உருவாக்கப்பட்டு உள்ளது.

தபால் மூலம் பெறும் வசதி

இதன்படி, காணாமல் போன, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக புதிய ரேஷன் கார்டுகளை www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் கேட்டு விண்ணப்பிக்கும் போது அதற்கான கட்டணம் ரூ.20 மற்றும் தபால் சேவை கட்டணம் ரூ.25 ஆக மொத்தம் 45 ரூபாயை இணையவழியில் கியூ.ஆர். கோடு அல்லது நெட் பாங்கிங் வழியாக செலுத்தி புதிய ரேஷன் கார்டுகளை தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த புதிய வசதியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் முன்னிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த புதிய வசதியை தொடங்கிவைத்தார். முன்னதாக சிறப்பாக பணியாற்றிய ரேஷன் கடை பணியாளர்களின் பணியை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் நற்சான்றிதழை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சிறந்த பணியாளர்கள்

அதன்படி, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களில் காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நந்தினிக்கு ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசாக பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதுபாலனுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட எடையாளர்களில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாபுவுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜனுக்கு ரூ.6 ஆயிரம், 3-ம் பரிசாக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த துரைராஜுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments