10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் திருச்சி பஞ்சப்பூரில் ரூ.600 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
திருச்சி பஞ்சப்பூரில் ரூ.600 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

அமைச்சர் அறிவிப்பு

சட்டசபையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை பெருந்தொழில் மீதான மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் ஒரு மேம்பட்ட உற்பத்தி மையம் நிறுவப்படும். உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ன் போது இந்த மையத்தை தொடங்க தமிழ்நாடு அரசு முயற்சிகள் மேற்கொள்ளும்.

14 சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் ஸ்மார்ட் நீர் அளவீட்டு அமைப்பு உருவாக்கப்படும். மணப்பாறை, தேனி, திண்டிவனம் மற்றும் சூளகிரி ஆகிய சிப்காட்டின் 4 புதிய தொழிற் பூங்காக்களில் ரூ.5 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்.

திருச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா

விருதுநகர், சூளகிரி மற்றும் தேனி ஆகிய சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.4½ கோடி திட்ட மதிப்பீட்டில் நிர்வாக அலுவலக வளாகம் கட்டப்படும். மறுசுழற்சி முறையில் பெறப்படும் நீரை கொண்டு 9 சிப்காட் தொழிற்பூங்காக்களின் தொழில் நீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.1.20 கோடி திட்ட மதிப்பீட்டில் விரிவான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும்.

ரூ.90 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ஆவணங்களை டிஜிட்டல் மயம் - ஆவண மேலாண்மை அமைப்பு. திருவள்ளூர் மாவட்டம் காரணியில் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 250 ஏக்கர் பரப்பில் ரூ.100 கோடியில் மின்னணுவியல்-பாதுகாப்பு பூங்கா, நகரங்களுக்கு இடையேயான வான்வெளி பயணத்திற்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்த வான்வழி இணைப்பு திட்டம்.

சென்னை, கோவையில் டைசல் உயிரியின் முகவரி என்ற பெயரில் ரூ.10 கோடியில் டைசல் புத்தாக்க மையம், திருச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியை மேம்படுத்த 10 லட்சம் சதுர அடியில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில் நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைக்கப்படும். இது திருச்சி பஞ்சப்பூரில் அமைக்கப்படும். இதனால் 10 ஆயிரம் பேருக்கு தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

அரியலூர் சிமெண்டு ஆலை

காரைக்குடி, ராசிபுரத்தில் ரூ.70 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்காக்கள், அரியலூர் சிமெண்டு வளாகத்தில் அரசு நகர் மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் உயிரியல் ஆய்வகம் மற்றும் இயற்பியல் ஆய்வுக்கூடம், ரூ.1.32 கோடியில் கட்டப்படும். டான்செம் பள்ளியில் உயர் தொழில் நுட்பத்துடன் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். ரூ.4 கோடியில் அரியலூர் சிமெண்டு தொழிற்சாலை வளாக சுவர் கட்டப்படும்.

அரியலூர் சிமெண்டு ஆலையில் ஆனந்தவாடி மற்றும் கல்லங்குறிச்சி சுரங்க குத்தகை எல்லையையொட்டி இரும்பு முள்வேலி, மூடிய மின் சுற்று, தொலைக்காட்சி கருவிகள் ரூ.1.50 கோடி செலவில் அமைக்கப்படும். டான்செம் நிறுவன வள திட்டமிடல் 5.20 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும். ஆலங்குளம் சிமெண்டு ஆலையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் விருந்தினர் மாளிகை, ஆய்வகம், விற்பனை, கணக்குதுறை கட்டிடங்கள், பணியாளர் குடியிருப்பு புதுப்பிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments