ராமநாதபுரத்தில் மேம்பால பணிகள் தீவிரம் ஜூன் மாதம் போக்குவரத்து தொடங்க திட்டம்




ராமநாதபுரத்தில் ரூ.30¾ கோடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜூன் மாத இறுதியில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.30¾ கோடி

ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் ரெயில் நிலையம் அருகில் அமைந்துள்ள ரெயில்வே கேட் பகுதியில் ரெயில் வரும் சமயங்களில் கேட் மூடப்படுவதால் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் நீண்ட தூரம் வாகனங்கள் நிற்பதால் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்களின் சிரமத்தினை போக்கிடும் விதமாக அந்த ரெயில்வே கேட் பகுதியில் புதிய சாலை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ரெயில்வே சாலை மேம்பாலம் அமைக்க நில ஆர்ஜிதத்திற்கு ரூ.5.14 கோடி மதிப்பிலும், கட்டுமானப் பணிகளுக்கு தொழில்நுட்ப அங்கீகாரமாக ரூ.25.60 கோடி மதிப்பிலும் என மொத்தம் ரூ.30.74 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மேம்பாலமானது, மொத்தம் 675.56 மீட்டர் நீளத்திலும், 11 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, பாலத்திற்கான அணுகு சாலை இருபுறமும் சேர்த்து மொத்தம் 379 மீட்டர் நீளம் அமைக்கப்படவுள்ளது.

பணிகள் தொடங்கின

கடந்த 2018-ம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கப்பட்ட இந்த பால பணிகள் 2 ஆண்டு காலத்தில் முடிக்க திட்டமிடப்பட்ட போதிலும் ரெயில்வே கேட்டின் இருபுறமும் தூண்கள் அமைக்கப்பட்டு சாலைகள் மட்டுமே போடப்பட்டது. இதன்பின்னர் பணிகள் முடிவடையாமல் பாதியிலேயே நின்றுபோனது. இதுதவிர, ரெயில்வே தண்டவாள பகுதியில் மேம்பால பணியும் ரெயில்வே நிர்வாகத்தால் நடைபெறாமல் இருந்து வந்தது. அதற்கான தளவாட பொருட்கள் வந்தபோதிலும் பணிகள் நடைபெறவில்லை.

இதனால் பல மாதங்களாக மேற்கண்ட பால பணிகள் நடைபெறாமல் மொட்டை பாலமாகவே காட்சியளித்தது. பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையின் பயனாக சாலையின் இருபுறங்களிலும் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. தடையாக இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் பாலம் கட்டும் பணிகள் துரிதமாக நடைபெற தொடங்கின.

ஜூன் மாத இறுதியில்..

பழைய பஸ்நிலையம் அருகில் உள்ள பகுதியில் சாலையின் ஓரத்தில் பாலத்திற்கான தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. பாலத்தின் மற்றொரு புறத்தில் தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேம்பால தூண்களுடன் சாலை பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர, ரெயில்வே தண்டவாள பகுதியில் இருபுறமும் ரெயில்வே நிர்வாகத்தின் சார்பில் மேம்பால பணிகளும் தொடங்கி நடந்து வருகிறது. பணிகள் அனைத்தையும் விரைவில் முடித்து ஜூன் மாத இறுதிக்குள் போக்குவரத்து தொடங்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments