அறந்தாங்கி அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு




அறந்தாங்கி அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செல்போன் கோபுரம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே குருந்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராகவன். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் தனியார் செல்போன் நிறுவனத்தின் சார்பில், செல்போன் கோபுரம் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள். குருந்திரக்கோட்டை கிராமத்தில் குடியிருப்புகள் அதிகமாகவும், நெருக்கமாகவும் குடியிருந்து வரும் பொதுமக்கள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வசிக்கும் இடத்தில் புதிதாக தனியார் செல்போன் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து குருந்திரக்கோட்டை ஆதிதிராவிட மக்களை சேர்ந்த 45 குடும்பங்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவு வரும் வரை கட்டுமான பணியை நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

மறியல்

இருப்பினும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாமல் நடைபெறுவதால், அதனை நிறுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பட்டுக்கோட்டை சாலையில் மறியல் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உயர் நீதிமன்ற உத்தரவு வரும் வரை கட்டுமான பணிகள் நிறுத்தப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தனர். அதன்பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments