இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மறுக்கப்படுவதாக வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு




இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை மறுப்பதாக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

ஐகோர்ட்டில் மனு

கோவையைச் சேர்ந்த முத்து என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2009-ம் ஆண்டு இயற்றப்பட்ட இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ், அனைத்து தனியார் பள்ளிகளும் மொத்த இடங்களில் 25 சதவீத இடங்களை சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கும் வகையில் ஒதுக்க வேண்டும்.

இந்த சட்டத்தின்படி, குறிப்பிட்ட பள்ளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

ஆனால், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிப்பதாக கூறி பல குழந்தைகளின் விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் நிராகரித்து விடுகின்றன.

விண்ணப்பிக்க இயலாத நிலை

ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் இயலாத நிலை உள்ளது.

ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் வசிக்கும் குழந்தைகள் எவரும் விண்ணப்பிக்கவில்லையென்றால் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ஆனாலும், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குழந்தைகள் எவரும் விண்ணப்பிக்காத பட்சத்தில் அருகில் உள்ள பகுதி குழந்தைகளுக்கு மாணவர் சேர்க்கை வழங்கப்படுவதில்லை.

குழந்தைகளை சேர்க்க வேண்டும்

எனவே, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குழந்தைகள் எவரும் விண்ணப்பிக்காத பட்சத்தில் அருகில் உள்ள பகுதி குழந்தைகளை சேர்த்துக்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அப்பால் வசிக்கும் குழந்தைகளும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

பதிலளிக்க உத்தரவு

இந்த மனு நீதிபதிகள் ஜெகதீஷ்சந்திரா, சரவணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையில் விதிமீறல் இருந்தால் அதிகாரிகளுக்கு புகார் அளிக்கலாம் என்றும், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments