பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற என்ஜினீயரிங் படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அடுத்த மாதம் 4-ந்தேதி கடைசிநாள்
பி.இ., பி.டெக்., பி.ஆர்க். போன்ற என்ஜினீயரிங் படிப்புகளில் சேர இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

என்ஜினீயரிங் படிப்புகள்

பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு வருகிற 8-ந்தேதி (திங்கட்கிழமை) வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவு வெளியானதும் உயர்கல்வி படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு செய்வதில் மாணவ-மாணவிகள், பெற்றோர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் முதலாம் ஆண்டு பி.இ., பி.டெக்., பி.ஆர்க். பட்டப்படிப்புக்கான விண்ணப்பப்பதிவு குறித்த தகவலை அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2023-24-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட பி.இ., பி.டெக்., பி.ஆர்க். முதலாம் ஆண்டு பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

அதன்படி, https://www.tneaonline.org, https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இதன் வாயிலாக விண்ணப்பிக்க முடியாதவர்கள், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை சேர்வை மையம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

5-ந்தேதி (இன்று) முதல் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு கட்டணத்துடன் பதிவேற்றம் செய்யலாம். பதிவு கட்டணமாக ஓ.சி., ஓ.பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி. மற்றும் டி.என்.சி. பிரிவினர்களுக்கு ரூ.500-ம், எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர்களுக்கு ரூ.250-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அசல் சான்றிதழ் சரிபார்ப்பு

கலந்தாய்வு விவரங்கள், வழிகாட்டி மற்றும் கால அட்டவணை ஆகியவற்றை இணையதளம் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ளமுடியும். விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் போதே, அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் பொருட்டு, தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையத்தினை மாணவர்கள் தேர்வு செய்வது அவசியம். அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் போது ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், அந்த குறிப்பிட்ட மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண், மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பப்படும். அவர்கள் அனுப்பப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையத்துக்கு வந்து, சரிசெய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு...

விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேரடியாக நடைபெறும். அதேபோல், பி.இ., பி.டெக். (தாமதமான சேர்க்கை, பகுதிநேரம்) ஆகியவற்றுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-22351014, 22351015, 1800-425-0110 என்ற எண்களிலும், tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments