வங்க கடலில் 8-ந் தேதி உருவாகும் ‘மோகா' புயல் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு குறைவு




வங்க கடலில் வருகிற 8-ந் தேதி (நாளை மறுதினம்) மோகா புயல் உருவாகிறது என்றும், இதனால் தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை உயரக்கூடும்

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிய நிலையில், இடையிடையே பரவலாக மழையும் பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து இருக்கிறது.

வாட்டி வதைக்கும் கத்தரி வெயில் காலம் தொடங்கினாலும் கடந்த 2 நாட்களாக வெயிலின் அளவு குறைவாகவே இருந்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக ஈரோடு, திருத்தணியில் 96.44 டிகிரி தான் வெயில் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி வரை உயரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

மோகா புயல்

இதற்கிடையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் இன்று வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஒன்று உருவாகிறது. இது நாளை (ஞாயிற்றுக்கிழமை) காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நாளை மறுதினம் (திங்கட்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக உருவாகிறது.

இந்த புயலுக்கு ‘மோகா' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த பெயரை ஏமன் நாடு வழங்கியுள்ளது. வங்க கடல் பகுதியில் புயல் உருவானாலும், இதனால் தமிழ்நாட்டுக்கு பெரிய அளவில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மிதமான மழை

மாறாக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் சில இடங்களிலும், நாளை மறுதினமும், அதற்கு அடுத்த நாளும் (செவ்வாய்க்கிழமை) ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் லக்கூர் 16 செ.மீ., வேப்பூர், மொடக்குறிச்சி 11 செ.மீ., சங்கராபுரம் 10 செ.மீ., லப்பைக்குடிக்காடி, திருச்சுழி, பரமத்திவேலூர், பெருங்களூர், செங்கம் தலா 9 செ.மீ., தொண்டி, காட்டுமயிலூர், கலசப்பாக்கம், ஈரோடு தலா 8 செ.மீ. உள்பட பல இடங்களில் மழை பெய்திருக்கிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments