ராமேஸ்வரம் டூ மனோரா கடற்பசு பாதுகாப்புக்கு டூ- வீலர் விழிப்புணர்வு பேரணி நிறைவு!கடற்பசு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராமேஸ்வரத்தில் துவங்கிய டூ- வீலர் பேரணி நேற்று மனோராவில் நிறைவு பெற்றது.

கடற்பசு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 'கடற்பசுவை பாதுகாப்போம், கடலை பாதுகாப்போம்' என்ற முழக்கத்துடன் வன ஆர்வலர்கள் 70 பேர் பங்கேற்ற டூ- வீலர் விழிப்புணர்வு பேரணி கடந்த 22-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து துவங்கியது.

ராமநாதபுரம், முத்துக்குடா, மணமேல்குடி, கட்டுமாவடி, சேதுபாவாசத்திரம் வழியாக, நேற்று தஞ்சாவூர் மாவட்டம், மனோராவில் பயணக் குழுவினர் பேரணியை நிறைவு செய்தனர்.

மேலும், கடற்பசு குறித்த விழிப்புணர்வு தகவல்களை, பொதுமக்களுக்கு விளக்கினர்.

பேரணி நிறைவு நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி கலந்துகொண்டு பயணக் குழுவினரை வரவேற்றார்.

அதன் பின், அவர், நிருபர்களிடம் கூறியதாவது;
பாக்ஜலசந்தி பகுதியில் காணப்படும் அபூர்வ கடல்வாழ் தாவர உண்ணி உயிரினமான கடற்பசுவை பாதுகாக்கும் நோக்கில் மனோராவை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு கடல் பசு பாதுகாப்பு மையத்தை 15 கோடி ரூபாயில் அமைத்துள்ளது. எதிர்காலத்தில் மனோரா சர்வதேச அளவிலான கடல் பசு ஆராய்ச்சி மையமாக திகழும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் வைல்ட் லைப் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகி சுவேதா ஐயர், ஓம்கார் பவுண்டேஷன் நிறுவனர் பாலாஜி, இணை இயக்குநர் சுமந்தா, கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், மீன் வளத்துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி, மீனவர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments