கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து எதிரொலி: புதுக்கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாளை நடைபெற இருந்த பாராட்டு விழா தள்ளிவைப்பு




ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து எதிரொலியாக புதுக்கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருந்த பாராட்டு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரெயில் விபத்து

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி சமீபத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் மூலம் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு கிடைத்ததால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புதுக்கோட்டையில் நாளை (திங்கட்கிழமை) பாராட்டுவிழா ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், பேரவை சார்பில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் புதுக்கோட்டை சிப்காட்டில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஒடிசாவில் கொல்கத்தா-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரெயில்கள் விபத்தில் ஏராளமான பயணிகள் இறந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

பாராட்டு விழா தள்ளிவைப்பு

இந்த விபத்தின் எதிரொலியாக தமிழகத்தில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை தள்ளிவைக்கப்பட்டன. இந்த நிலையில் புதுக்கோட்டையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாளை நடைபெற இருந்த பாராட்டு விழாவையும் தள்ளிவைத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளிடம் கேட்ட போது, ``முதல்-அமைச்சா் மு.க.ஸ்டாலினுக்கு நாளை நடைபெற இருந்த பாராட்டு விழா தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பாராட்டு விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்'' என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments