இலுப்பூர் அருகே டயர் கழன்று ஓடியது: புளியமரத்தில் ஜீப் மோதி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 2 பேர் படுகாயம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் கலைச்செல்வி (வயது 55). இவர் நேற்று காலை வழக்கம்போல் புதுக்கோட்டையில் இருந்து அரசு ஜீப்பில் விராலிமலைக்கு பணிக்கு சென்று கொண்டிருந்தார். ஜீப்பை அன்னவாசலை சேர்ந்த ராஜசேகர் ஓட்டி சென்றுள்ளார்.

இலுப்பூர் அருகே உள்ள மேட்டுச்சாலை எனும் இடத்தில் ஜீப் சென்றபோது முன்புற டயர் பொருத்தப்பட்ட பேரிங் துண்டாகி இடதுபுற டயர் மட்டும் கழன்று தனியாக ஓடியுள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் ராஜசேகர் சுதாரிப்பதற்குள் ஜீப் சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜீப் அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி மற்றும் டிரைவர் ராஜசேகர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments