கோபாலப்பட்டிணம் - அறந்தாங்கி அரசு டவுன் பஸ் சரியாக இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி! அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை!



கோபாலப்பட்டிணத்திற்கு பேருந்து சரியாக இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதால், இதுகுறித்து அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே கோபாலப்பட்டிணம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த 2008-ஆம் திமுக ஆட்சியில் கோபாலப்பட்டிணத்தில் இருந்து மீமிசல் வழியாக அறந்தாங்கிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டது. கோபாலப்பட்டிணத்தில் இருந்து அறந்தாங்கிக்கு அதிகாலை 4.30 மணிக்கு ஒரு பேருந்தும், காலை 10.15 மணிக்கு ஒரு பேருந்தும், இரவு 8.30 மணிக்கு ஒரு பேருந்தும், அறந்தாங்கியில் இருந்து கோபாலப்பட்டிணத்திற்கு இரவு 10.30 மணிக்கு ஒரு பேருந்தும் என அதிகாலை, காலை, இரவு என ஒரு நாளைக்கு மூன்று வேளை பேருந்து இயக்கப்பட்டு வந்தது.
இப்பேருந்தை பயன்படுத்தி கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மக்கள் மீமிசல், ஆவுடையர்கோவிலில் உள்ள அரசு அலுவலங்கள், அறந்தாங்கியில் உள்ள மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி போன்ற பல்வேறு ஊர்களுக்கு தினசரி சென்று வந்தனர்.
அவுலியா நகரில் பேருந்து திரும்பும் போது எடுத்த படம்
இந்நிலையில் இரவு நேரங்களில் வந்து சென்ற பேருந்துகள் சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. அதிகாலை மற்றும் காலையில் வந்து சென்ற பேருந்து கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று குறைந்த பிறகும் அந்த பேருந்து மீண்டும் இயக்கப்படவில்லை. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி கடந்த 16.07.2021 வெள்ளிக்கிழமை கோபாலப்பட்டிணத்தில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமசந்திரன் தலைமையில் நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில் அவுலியா நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் முஹம்மது ரியாஸ் தலைமையில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கோபாலப்பட்டிணத்திற்கு இயக்கப்பட்டு வந்த பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
இதனையடுத்து அறந்தாங்கி சட்ட மன்ற உறுப்பினர் ST.ராமசந்திரன் உடனடியாக அரசு போக்குவரத்து கழக அதிகாரியை தொடர்பு கொண்டு பேசி 17/07/2021 அன்று முதல் பேருந்து இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆனால் சில மாதங்களாக அதிகாலை மற்றும் காலையில் வரக்கூடிய பேருந்து சரி வர இயக்கப்படுவதில்லை. தினசரி இயக்கப்படமால் ஒரு சில நாட்களில் மட்டுமே கோபாலப்பட்டிணத்திற்கு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும் கோபாலப்பட்டிணத்திற்கு ஒரு சில நாட்கள் வந்தாலும் பெரிய பள்ளிவாசல் பகுதிக்கு வரமால் அவுலியா நகரிலேயே திரும்பி சென்று விடுகிறது. இதனால் பெரிய பள்ளிவாசல் பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள் ஏமாற்றம் அடைவது மட்டுமில்லாமல் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே கோபாலப்பட்டிணத்தில் இருந்து அறந்தாங்கிக்கு தினமும் அதிகாலை, காலை மற்றும் இரவு நேரங்களில் பேருந்தை சரிவர இயக்க அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமசந்திரன்.MLA நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments