மாவட்ட தலைநகரான புதுக்கோட்டையில் புதுக்கோட்டை வழியாக செல்லும் அஜ்மீர் - இராமேஸ்வரம் & அயோத்தி - இராமேஸ்வரம் ரயில்கள் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை
ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படும் வடமாநில ரெயில்களை புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாராந்திர ரெயில்கள்

ராமேசுவரத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக பனாரஸ், புவனேஸ்வர், அயோத்தி, அஜ்மீர் உள்ளிட்ட வடமாநில பகுதிகளுக்கு வாராந்திர ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் புவனேஸ்வர் ரெயில்கள் இரு மார்க்கங்களிலும், பனாரஸ் ரெயில் ஒரு மார்க்கத்திலும் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று சென்றன.

மற்ற ரெயில்களான அயோத்தி, அஜ்மீர் ரெயில்களுக்கு புதுக்கோட்டை ரெயில் நிறுத்தம் வழங்கப்படாமல் உள்ளது. பனாரஸ் ரெயிலுக்கான புதுக்கோட்டை நிறுத்தம் கொரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்டன. தற்போது வரை வழங்கப்படவில்லை.

புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை

இந்த நிலையில் அஜ்மீர்-ராமேசுவரம்-அஜ்மீர் "ஹம்சபார்" ரெயில் (வண்டி எண் 20973/20974) மற்றும் அயோத்தி-ராமேசுவரம்-அயோத்தி "ஷ்ரத்தா சேது" ரெயில் (22613/22614) புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் நீண்ட காலமாக ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் மேற்கண்ட ரெயில்கள் புதுக்கோட்டையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர். ஆனால் 4 மாதங்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பயணிகள் கூறுகின்றனர்.

எனவே தெற்கு ரெயில்வே நிர்வாகம் ரெயில்வே வாரியத்திடம் வலியுறுத்தி மேற்கண்ட ரெயில்கள் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நின்று செல்லவும், ராமேசுவரம் -பனாரஸ் ரெயில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் மீண்டும் நின்று செல்ல வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் மக்கள் பிரதிநிதிகளும் ரெயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments