திருச்சி ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நிறைவு 8-ஆம் நடைமேடை தொடக்கம்
திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து, 8 ஆவது நடைமேடை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

திருச்சி ரயில் நிலைய 8 ஆவது நடைமேடை பகுதியில் 10 வது தண்டவாளத்தில் சுமாா் ரூ. 13.5 கோடியில் பராமரிப்புப் பணிகள் கடந்த 58 நாள்களாக ( முதல் கட்டப் பணிகள் 45 நாள்கள், 2 ஆம் கட்டப் பணிகள் 11 நாள்கள், தொடக்கப்பணிகள் 2 நாள்கள்) நடைபெற்று வந்தன. இதனால் சிக்னல்கள் அனைத்தும் மனிதா்களால் இயக்கப்பட்டன.

இதனால் திருச்சி ரயில்வே சந்திப்பில் கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை பல்வேறு ரயில்கள் முழுமையான ரத்தும், பகுதி ரத்தும் செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

குறிப்பாக, திங்கள்கிழமை திருச்சி வழியே சென்னை சென்ற தென் மாவட்ட ரயில்கள் திருச்சி ரயில்வே சந்திப்பில் 5 மணி நேரம் நிறுத்தப்பட்டு, சென்னைக்குச் சென்ால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனா். ரயில் நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் அவா்கள் ஈடுபட்டனா்.

இந்நிலையில் பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தன. ரயில்வே சந்திப்பின் கல்லுக்குழி பகுதியில் உள்ள 10 ஆவது தண்டவாளம் போடப்பட்டு, இதை இணைக்கும் 8 ஆவது நடைமேடைப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டன. இதை கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன், கூடுதல் கோட்ட மேலாளா் எஸ்.டி. ராமலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா்.

‘ரயில்களின் காத்திருப்பு நேரம் குறையும்’

இதன்மூலம் சோழன் விரைவு ரயில்கள், சென்னை எழும்பூா் - ராமேஸ்வரம் விரைவு ரயில்கள், திருப்பதி - ராமேஸ்வரம் விரைவு ரயில்கள், திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில்கள், புவனேஸ்வா் வாராந்திர விரைவு ரயில்கள், ராமேஸ்வரம் - பனாரஸ் வாராந்திர அதிவேக விரைவு ரயில்கள், திருச்செந்தூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயில்கள், தாம்பரம் - நாகா்கோவில் அந்தியோதயா அதிவேக விரைவு ரயில்கள், கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரயில்கள் உள்ளிட்ட ரயில்கள் விழுப்புரம் - அரியலூா் - திருச்சி லைனை பாதிக்காமல் நடைமேடை 8 இல் கையாளப்படும்.

620 மீட்டா் நீளமுள்ள இந்த நடைமேடையில் ஒரு ரயிலின் 26 கோச்சுகளையும் நிறுத்த முடியும். ரயில்களை கையாள்வதும் சுலபமாகும்.

திருச்சி ரயில்வே சந்திப்புக்குள் சென்னை மாா்க்கத்திலிருந்து உள்வரும், மதுரை மாா்க்கத்துக்குச் செல்லும், காரைக்குடி பகுதிகளுக்குச் செல்லும் ரயில்களின் காத்திருப்பு நேரம் குறையும். பயணிகள் மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதைகள் வழிகளைப் பயன்படுத்தாமல், திருச்சி ரயில்வே சந்திப்பின் 2 ஆவது நுழைவான கல்லுக்குழி வழியே நடைமேடை 8 ஐ சுலபமாக அணுக முடியும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. பணிகள் நிறைவைவொட்டி புதன்கிழமை அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயக்கப்பட்டன.

 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments