திருச்சியிலிருந்து இனி நேரடியாக வியட்நாம் செல்லலாம்... நவம்பரில் விமான சேவை!



தமிழகத்திலிருந்து முதன்முறையாக திருச்சி - வியட்நாம் இடையே விமான சேவை தொடங்க உள்ளது. திருச்சி சர்வதேச விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, கொழும்பு, சார்ஜா, துபாய் என வெளிநாட்டு விமானசேவை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை, பெங்களூரூ, ஹைதராபாத், டெல்லிக்கு உள்நாட்டு விமானங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

திருச்சி விமானநிலையத்தில் கட்டப்பட்டு வரும் புதிய முனையம் அக்டோபர் மாத இறுதியில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு இங்கிருந்து பிற பகுதிகளுக்கு அதிக விமான சேவைகள் இயக்கப்படவுள்ளன.

குறிப்பாக, திருச்சி விமானநிலையத்தில் இருந்து அதிகமாக பகல் நேரங்களில் உள்நாட்டு விமானசேவையும், இரவு நேரங்களில் வெளிநாட்டு விமான சேவையும் மேற்கொள்ளும் வகையில், பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சோழர் காலத்தில் வியாபார தளமாக இருந்தவியட்நாம் நாட்டுக்கு திருச்சியிலிருந்து வியட்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மூலம் நவம்பர் 2-ம் தேதி முதல் விமானம் இயக்கப்படவுள்ளது.

இந்த விமானம் வியட்நாமில் இருந்து செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளிலும், திருச்சியில் இருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும் இயக்கப்படும். வியட்நாமில் இருந்து உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு புறப்பட்டு திருச்சி விமானநிலையத்துக்கு இரவு 11.30 மணிக்கு வந்தடையும். திருச்சியில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு அந்நாட்டின் நேரப்படி காலை 7 மணிக்கு வியட்நாம் சென்றடையும்.

ஏற்கெனவே வியட்நாம் நாட்டுக்கு மும்பை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத், கொச்சி ஆகிய விமானநிலையங்களில் இருந்து விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வியட்நாமுக்கு முதல்முறையாக திருச்சியில் இருந்து விமானம் இயக்கப்படவிருப்பது பெருமைக்குரியது. இதன்மூலம் இயற்கை சுற்றுலா நகரமான வியட்நாம் நாட்டின் ஹோசிமின் சிட்டிக்கு தென்மாநில மக்களின் வருகை அதிகரிக்கும் என்பதால் இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா வளர்ச்சியும், வர்த்தகமும் அதிகரிக்கும் என விமானநிலைய ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக விமான போக்குவரத்து குறித்து ஆய்வு நடத்தி வரும் உபயதுல்லா இந்து தமிழ் நாளிதழிடம் கூறுகையில், ‘‘வியட்நாம்-திருச்சி விமான சேவையால் தமிழகத்தின் வர்த்தம் மற்றும் சுற்றுலா துறை வளர்ச்சி அதிகரிக்கும். மேலும் கடந்த 2020-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து வியட்நாம் நாட்டுக்கு 1,37,900 பேர் பயணித்து இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும்" என்றார்.

நன்றி: இந்து தமிழ்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments