பட்டுக்கோட்டை அருகே போலீஸ்காரர் அடித்ததில் மீன் வியாபாரி இறந்ததாக பதற்றம் உறவினர்கள் சாலை மறியல்




மது விற்றதாக கூறி போலீஸ்காரர் அடித்ததால் மீன் வியாபாரி இறந்ததாக பதற்றம் நிலவியது. இதனையடுத்து இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீன் வியாபாரி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த தாமரங்கோட்டை உம்பலக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் வீரையன்(வயது 55) மீன் வியாபாரி. இவருக்கு 2 மனைவிகளும், 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

நேற்று முன்தினம் மதியம் துவரங்குறிச்சி மீன் மார்க்கெட் அருகே மது விற்றதாக கூறி பட்டுக்கோட்டை மதுவிலக்கு பிரிவு போலீஸ்காரர் அவரை விசாரணைக்கு அழைத்து உள்ளனர். ஆனால் அவர் போக மறுத்து இருக்கிறார். அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு இருக்கிறது.

அப்போது வீரையன் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

பரிதாப சாவு

பிறகு அவரை அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீரையன் இறந்த தகவல் அறிந்ததும் வீரையனின் உறவினர்கள், ஊர் மக்கள் என ஆண்களும், பெண்களும் திரண்டு நேற்று காலை பட்டுக்கோட்டை பஸ் நிலையத்திற்கு வந்தனர்.

பதற்றம்

அங்கு வந்த அவர்கள் அனைவரும் பஸ் நிலையத்தைச் சுற்றி சாலையில் அமர்ந்து வீரையன் மரணத்திற்கு காரணமான போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், போலீஸ்காரர் அடித்ததில்தான் அவர் இறந்தார் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

பட்டுக்கோட்டை பஸ் நிலையம் அருகே ஆண்கள் ஒரு பக்கமும், பெண்கள் மறு பக்கமும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் நேற்று காலை 11 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை பஸ்கள், பஸ் நிலையத்துக்குள் வர முடியவில்லை.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்து பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரிதிவிராஜ் சவுகான், தாசில்தார் ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீஸ்காரர் அடித்ததில் இறந்து போன வீரையன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அவருடைய மகன்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினர். அப்போது அதிகாரிகள், பிரேத பரிசோதனை நடந்த பிறகு பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

2 மணி நேரம் சாலை மறியல்

சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த சாலைமறியல் போராட்டம் காரணமாக பட்டுக்கோட்டை பஸ் நிலையத்துக்கு பஸ்கள் எதுவும் வராததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments