புதுக்கோட்டை அருகே கார் மீது பஸ் மோதல்; தாய்-மகன் உள்பட 3 பேர் பலி கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது பரிதாபம்




புதுக்கோட்டை  அருகே கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது கார் மீது பஸ் மோதிய விபத்தில் தாய்-மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

கார் மீது பஸ் மோதல்

சிவகங்கை அருகே உள்ள ஒக்கூரை அடுத்த கீழப்பூங்குடியை சேர்ந்தவர் அஞ்சலை என்கிற ராஜேஸ்வரி (வயது 45). இவரது மகன்கள் முகிலன் (22), ஆதீஸ்வரன் (14), அகிலன் (17). இந்தநிலையில் அஞ்சலை தனது மகன்களுடன் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் நாகநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய முடிவு செய்தார். இதையொட்டி முத்துபட்டியை சேர்ந்த சந்தோஷ் (25) என்பவருடைய காரில் நேற்று காலை அஞ்சலை தனது 3 மகன்களுடன் பேரையூர் நாகநாதர் கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு அதே காரில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். 

திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை  அருகே நமண சமுத்திரம் செபஸ்தியார்புரம் அருகே கார் சென்று கொண்டிருந்தது. இந்தநிலையில், மதுரையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் பஸ் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று நேருக்கு நேர் கார் மீது மோதி ஏறி நின்றது.

உடல் நசுங்கி பலி

இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. மேலும் காரில் சிக்கி கொண்டவர்கள் வலியால் அலறி துடித்தனர். பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் காரின் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. அதனைதொடர்ந்து திருமயம் தீயணைப்பு துறையினருக்கும், நமண சமுத்திரம் போலீசாருக்கும் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் பஸ்சை தூக்கி நிறுத்தினர். பின்னர் காருக்குள் பார்த்தபோது சந்தோஷ், முகிலன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து, படுகாயமடைந்த அஞ்சலை, ஆதீஸ்வரன், அகிலன் ஆகியோரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அஞ்சலை பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இதனைதொடர்ந்து ஆதீஸ்வரன், அகிலன் ஆகியோருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் விபத்து நடந்த பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பார்வையிட்டு ஆய்வு செய்தார். விபத்து குறித்து நமண சமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அகற்றி போலீசார் போக்குவரத்து சரி செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments