நாகப்பட்டினம் - இலங்கை யாழ்ப்பாணம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து 10-ந்தேதி தொடக்கம் ஒருவருக்கு ரூ.6,500 கட்டணம் நிர்ணயம்





நாகப்பட்டினம் - இலங்கை யாழ்ப்பாணம் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து வரும் 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்க இருக்கிறது. ஒருவருக்கு ரூ.6,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கப்பல் போக்குவரத்து

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே, 1914-ம் ஆண்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. அதன்பிறகு வீசிய அதிதீவிர புயலால் தனுஷ்கோடி முற்றிலும் அழிந்த நிலையில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிறகு, 1965-ம் ஆண்டில் இருந்து ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே பயணிகள் போக்குவரத்து சேவை நடந்தது. இந்த சேவையும், 1981-ம் ஆண்டுகளில், இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரினால், பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, இந்தியா-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்க பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டன.

இதற்கிடையில், தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில் மானியக் கோரிக்கையின்போது, ‘ராமேஸ்வரம்- தலைமன்னார் (50 கி.மீட்டர்), ராமேஸ்வரம்-காங்கேசந்துறை (100 கி.மீட்டர்) வழித்தடங்களில் பயணிகள் போக்குவரத்து சேவை தொடங்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் மதிப்பீடுகள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்' என்று அறிவித்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்த சூழலில், கடந்த ஜூலை மாதம் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகை தந்தார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்படுவது தொடர்பாக ஆலோசனைகள் நடத்தினார். இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குவது தொடர்பாக இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் துறைமுகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் தொடங்கின. துறைமுகத்தை ஆழப்படுத்துதல், பயணிகள் முனையம், சுங்க மற்றும் குடியுரிமை அறை, பயணிகள் அறை உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த பணிகளை, தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கடந்த 20-ந்தேதி நேரில் ஆய்வு செய்தார்.

சிரியாபாணி கப்பல்

இந்த சேவைக்காக, இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் சார்பில் பயணிகள் கப்பல் கட்டும் பணிகள் நடந்தது. தற்போது, கப்பல் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்த பயணிகள் கப்பலுக்கு ‘சிரியாபாணி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கப்பல், கொச்சினில் இருந்து நாகப்பட்டினத்துக்கு இன்று வருகை தரவுள்ளது.

இந்த நிலையில், நாகப்பட்டினம்-காங்கேசந்துறை இடையே வருகிற 10-ந்தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம், வருகிற 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ‘சிரியாபாணி' அதிவேக கப்பல் 150 பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடியதாக கப்பல் உருவாக்கப்பட்டு உள்ளது.

ரூ.6,500 கட்டணம்

நாகப்பட்டினத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்படும் சிரியாபாணி கப்பல் 3 முதல் 4 மணி நேரங்களில் யாழ்பாணம் காங்கேசந்துறை துறைமுகத்துக்கு சென்றடையும். பின்னர் அங்கிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு மாலை நாகப்பட்டினத்தை வந்தடைகிறது. பயணிகள் ஒருவருக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி சேர்த்து ரூ.6 ஆயிரத்து 500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த கப்பலில் பயணிகள் 50 கிலோ எடை வரை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தங்கள் உடமைகளை கொண்டு செல்லலாம். இந்த பயணத்துக்கு பாஸ்போர்ட், இ-விசா கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த கப்பலை கே.பி.வி.ஷேக் முகமது ராவூதர் எனும் தனியார் நிறுவனம் பராமரிப்பதுடன், டிக்கெட் முன்பதிவு பணிகளையும் மேற்கொள்கிறது.

10 நாட்கள் இயங்கும்

நாகப்பட்டினம்-காங்கேசந்துறை இடையே வருகிற 10-ந்தேதி தொடங்கப்பட உள்ள இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை, 10 நாட்கள் மட்டுமே நடைபெற இருக்கிறது. அதன்பிறகு, வடகிழக்கு பருவமழை காலம் என்பதால், வங்கக்கடலில் புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு இதுப்பதால், பாதுகாப்பு கருதி தற்காலிகமாக அந்த சேவை நிறுத்தப்படுகிறது. வடகிழக்கு பருவமழை காலம் முடிந்த பிறகு, மீண்டும் ஜனவரி மாதம் முதல் இலங்கைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நாள்தோறும் இயக்கப்பட இருக்கிறது.

திருச்சியில் இருந்து கொழும்புக்கு விமான கட்டணம் ரூ.10 ஆயிரமாக உள்ளது. அதேநேரம், சிரியாபாணி பயணிகள் கப்பலில் காங்கேசந்துறைக்கு ரூ.6 ஆயிரத்து 500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குறைந்த கட்டணத்தில், இயக்கப்பட உள்ள இந்த கப்பல் போக்குவரத்து சேவை காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான சுற்றுலா மேம்படவும், வர்த்தகம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments