நாளை மகாளய அமாவாசை: ராமேசுவரம் வரும் பக்தர்களுக்காக முன்னேற்பாடுகள் 270 சிறப்பு பஸ்கள் இயக்கம்
நாளை மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் வரும் பக்தர்கள் வசதிக்காக கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன..

மகாளய அமாவாசை

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் கோவிலுக்கு ஆடி, தை அமாவாசை, புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாட்களில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். குறிப்பாக புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, திதி தர்ப்பண பூஜை செய்ய அதிகமான பக்தர்கள் வருவார்கள்.

இந்த ஆண்டின் புரட்டாசி மகாளய அமாவாசை நாளை(சனிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு ராமேசுவரத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

முன்னேற்பாடு பணிகள்

பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் தீர்த்த கிணறுகளில் புனித நீராட செல்ல வசதியாக கோவிலின் வடக்கு ரதவீதி சாலையில் இருந்து வடக்கு கோபுர வாசல் தீர்த்த கிணறுகள் செல்லும் பாதை என பல இடங்களிலும் தடுப்பு கம்புகள் கட்டப்பட்டுள்ளன. பக்தர்கள் வரிசையாக தரிசனம் செய்ய வசதியாக கோவிலின் கிழக்கு ரத வீதி சாலையில் இருந்து தெற்கு கோபுர ரதவீதி சாலை வரையிலும் நீண்ட வரிசையில் தடுப்பு கம்புகளும் கட்டப்பட்டுள்ளன.

பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தலைமையில், உதவிக்கோட்ட பொறியாளர் மயில்வாகனன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியம், பேஷ்கார் கமலநாதன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

சிறப்பு பஸ்கள்

மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்று(வெள்ளிக்கிழமை) நாளை(சனிக்கிழமை) ஆகிய 2 நாட்களும் பொதுமக்களின் வசதிக்காக மதுரை, காரைக்குடி, தேவகோட்டை, பரமக்குடி, சாயல்குடி, மானாமதுரை, புதுக்கோட்டை, வேதாரண்யம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. மகாளய அமாவாசைக்கு ராமேசுவரம் செல்லும் பயணிகள் முன்பதிவு செய்து பஸ்களில் பயணம் செய்யுமாறு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் கேட்டுக்கொண்டார்.

அதேபேல் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு தேவிபட்டினத்தில் உள்ள நவபாஷான கடலில் புனித நீராட பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் அங்கும் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments