அதிகமாக மழை பெய்தால் பள்ளிகளுக்கு கலெக்டர் விடுமுறை அளிக்கலாம் தஞ்சையில், அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேட்டி
அதிகமாக மழை பெய்தால் பள்ளிகளுக்கு கலெக்டர் விடுமுறை அளிக்கலாம் என்று தஞ்சையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

அமைச்சர் பேட்டி

தஞ்சையை அடுத்த தளவாய்பாளையத்தில் கத்தரிநத்தம் ஊராட்சி அலுவலக விரிவாக்க கட்டிடம் மற்றும் கூட்ட அறை திறப்பு விழா நடந்தது. புதிய அலுவலக கட்டிடத்தை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களின் கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றும் வகையில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு, திறக்கப்பட்டு வருகிறது. கட்டிடங்களையும் திறந்து வைக்க வேண்டும். மக்களையும் சந்திக்க வேண்டும் என்று நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

பேரிடர் மேலாண்மை குறித்த கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்க உள்ளது. அதில் தெரிவிக்கப்படும் அறிவுரைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்தால், எனது அறிவுறுத்தலை எதிர்பார்க்காமல், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

காலை உணவு திட்டம்

மழை காலங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காலை உணவு திட்டத்தில் 31 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தை பார்த்து பிற மாநிலங்களும் இந்த திட்டத்தை பின்பற்றுகின்றனர்.

தெலுங்கனா மாநிலத்தில் இத்திட்டத்தை தொடங்கி உள்ளனர். உணவு இல்லை என்பதால் பள்ளிகளுக்கு செல்லவில்லை என்ற குறைபாடுகள் இருக்கக்கூடாது என்பதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. காலை உணவு திட்டம் என்பது வெற்றிகரமான திட்டமாக உள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத தகுதியான பயனாளிகள் மேல்முறையீடு செய்யலாம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் ஒரு திட்டத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது.

ஏற்கனவே 64 லட்சம் பெண்கள், தாங்கள் வசதி வாய்ப்புடன் இருப்பதால், உரிமைத்தொகை வேண்டாம் என தெரிவித்திருக்கிறார்கள். அதே நேரத்தில் தகுதி உள்ளவர்கள் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து மனுக்களை வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் மனுக்களில் தகுதி உடையவராக இருந்தால் விடுபடாமல் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments