நாகப்பட்டினம் - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் கீழ்வேளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி 3 மாணவர்கள் பலி
கீழ்வேளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதியதில் 3 மாணவர்கள் பலியானார்கள்.

மாணவர்கள்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே கூத்தூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முகம்மது அப்துல்லா. இவரது மகன் பஹது அல்ரிஸ்வான் (வயது 17). இவர், திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த அப்துல் முகம்மது மகன் பாசித் என்கிற முகம்மது இர்பான் சரிப்(16). இவர், கீழ்வேளூரில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில்(ஐ.டி.ஐ.) படித்து வந்தார்.

அதேபோல் கூத்தூர் புதுத்தெருவை சேர்ந்த பகுருதீன் என்பவரது மகன் நவுபல்தீன்(17). இவர், திருவாரூர் அரசு கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியது

நண்பர்களான இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் சென்று விட்டு நாகை-திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை நவுபல்தீன் ஓட்டினார்.

வழியில் உள்ள குருக்கத்தி பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, எதிரே திருச்சியில் இருந்து நாகை நோக்கி குளிர்பானம் ஏற்றிச்சென்ற சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

3 பேர் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த பஹது அல்ரிஸ்வான், முகம்மது இர்பான்சரிப், நவுபல்தீன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதை கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பஹது அல்ரிஷ்வான், முகம்மது இர்பான்சரிப் ஆகிய இருவரும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்தனர். தொடர்ந்து நவுபல்தீன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி நவுபல்தீன் பரிதாபமாக இறந்தார்.

ஹெல்மெட் அணியவில்லை

இருசக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று காவல்துறை சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அறிவிப்பை இருசக்கர வாகனங்களில் செல்பவர்களில் பெரும்பாலானோர் பொருட்படுத்துவதில்லை. இதனால் விபத்து நேரிடும்போது உயிர்ப்பலி ஏற்படுகிறது.

இந்த விபத்தில் பலியான மாணவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து உள்ளதுடன் இவர்கள் யாரும் ஹெல்மெட் அணிந்து செல்லாததால் விபத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments